இந்தியா
வக்பு மசோதாவிற்கு எதிரான மனுக்கள்; சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

வக்பு மசோதாவிற்கு எதிரான மனுக்கள்; சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
வக்பு மசோதாவிற்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான மனுக்களை இன்று (ஏப்ரல் 16) விசாரணை செய்கிறது. இந்த அமர்வில் நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் பி.வி சஞ்சய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதன் விசாரணை மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்கவும்: CJI-led bench to hear petitions challenging new Waqf Act today இந்த மசோதாவை எதிர்த்து ஏறத்தாழ 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் எம்.பி., அசாதுதீன் ஓவைசி, டி.எம்.சி எம்.பி., மஹுவா மொய்த்ரா, ஆர்.ஜே.டி எம்.பி., மனோஜ் குமார் ஜா, சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஜியா உர் ரஹ்மான், காங்கிரஸ் எம்.பி-க்கள் இம்ரான் மசூத் மற்றும் முகமது ஜாவேத், முன்னாள் எம்.பி. உதித் ராஜ், மௌலானா மஹ்மூத் ஆசாத் மதனி உள்ளிட்டோரும் இந்த மசோதாவிற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர். இஸ்லாமின் ஸ்தாபனம், நிர்வாகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அம்சமாக வக்பு அமைகிறது. எனவே, அரசியலமைப்பின் கீழ் அவற்றுக்கு பாதுகாப்பு உரிமை இருப்பதாக மனுக்கள் வாதிடுகின்றன.இது மட்டுமின்றி, சட்டப்பிரிவு 14-ஐ (சமத்துவத்திற்கான உரிமை), புதிய மசோதா மீறுகிறது என்று மனுக்களில் குறிப்பிடுகின்றன. கூடுதலாக, சட்டப்பிரிவுகள் 15 (மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு), 21 (வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை), 25 (மத சுதந்திரம்), 26 (மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்), 29 (சிறுபான்மையினரின் உரிமைகள்), 30 (மத மற்றும் மொழி சிறுபான்மையினரின் உரிமை) மற்றும் 300A (சொத்துக்கான உரிமை) போன்றவற்றுக்கு எதிராக மசோதா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்குகளில் முதன்மை மனுதாரரான ஓவைசி தரப்பில் வழக்கறிஞர் நிஜாம் பாஷா ஆஜராகிறார். மேலும், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவான் மற்றும் ஷோப் ஆலம் ஆகியோர் புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வாதாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பா.ஜ.க ஆளும் மாநிலங்களான ஹரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அசாம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை வக்பு சட்ட திருத்த மசோதா செல்லுபடியாகும் என்ற வகையில் அதற்கு ஆதரவாக மனுக்களை தாக்கல் செய்துள்ளன.வக்பு சொத்துகளை திறம்பட நிர்வகிப்பதற்கான சட்டப்பூர்வ, தொழில்நுட்ப ரீதியாக உந்துதல் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்பை இந்தச் சட்டம் எதிர்பார்க்கிறது என்று மத்தியப் பிரதேசம் கூறியது. அதே நேரத்தில் பயனாளிகளின் சமூக – பொருளாதாரத்தை இந்த மசோதா மேம்படுத்துகிறது என்று அசாம் தெரிவித்துள்ளது.குர்கானில் உள்ள குருத்வாரா சிங் சபாவின் தலைவர் தயா சிங், ஏப்ரல் 14 அன்று மற்றொரு புதிய மனுவை தாக்கல் செய்தார். 2025 ஆம் ஆண்டு சட்டம், மத அடிப்படையில் தொண்டு செய்வதற்கான தனது அடிப்படை உரிமையை மீறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய சட்ட திருத்தம், முஸ்லிம் அல்லாதவர்கள் வக்புகளை உருவாக்குவதைத் தடுக்கிறது.