
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 17/04/2025 | Edited on 17/04/2025

சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் புலேவின் வாழ்க்கை வரலாறு ‘புலே’ எனும் தலைப்பில் இந்தியில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜோதிராவ் புலேவாக பிரதிக் காந்தி நடித்துள்ளார். இதையடுத்து ஜோதிராவ் புலே மனைவியான சாவித்ரிபாய் புலேவாக பத்ரலேகா நடித்துள்ளார். இப்படத்தை டான்சிங் சிவா பிலிம்ஸ் மற்றும் கிங்ஸ்மென் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்க ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தை ஆனந்த் நாராயன் மகாதேவன் இயக்கியுள்ளார். இவர் நடிகரும் கூட. தமிழில் ரிதம், பாபநாசம், 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
‘புலே’ படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகியிருந்தது. அதில் தங்களை தவறாக சித்தரித்துள்ளதாக பிராமண சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து தணிக்கை குழு வாரியம் படத்தில் இருந்து சாதி பெயர்களை நீக்க கோரியது. மேலும் டிரெய்லரில் இடம் பெற்ற சர்ச்சையான காட்சிகளையும் நீக்க கோரி ‘யு’ சான்றிதழ் வழங்கியது. இதற்கு அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தேசியவாத காங்கிரஸ் கட்சி மஹாராஷ்டிரா மாநில தலைவர் ஜெயந்த் பட்டில் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்படம் ஜோதி ராவ் புலேவின் 198வது பிறந்தநாளான கடந்த 11ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இப்படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. இதனால் பிரமாண சமூக எதிர்ப்பால் படம் தள்ளிப்போனதா இல்லை சென்சார் போர்டு விஷயங்களால் தள்ளிப் போனதா என்ற கேள்விகள் எழுந்தது. இதற்கு படத்தின் இயக்குநர் ஆனந்த் நாராயன் மகாதேவன், பிராமண சமூக எதிர்ப்பால் தான் படம் தள்ளிப் போனது என சமீபத்தில் விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப் படத்திற்கு எதிராக பேசிய பிராமண சங்கங்களை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட அவர், “என் வாழ்க்கையின் முதல் நாடகம் ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் பூலே பற்றியது தான். இந்த நாட்டில் சாதிவெறி இல்லையென்றால், அவர்கள் ஏன் போராட வேண்டினார்கள்? இப்போது இந்த பிராமண மக்கள் வெட்கப்படுகிறார்கள், அவமானத்தால் இறந்து கொண்டிருக்கிறார்கள், அல்லது நாம் பார்க்க முடியாத மாற்று பிராமண இந்தியாவில் வாழ்கிறார்கள். இங்கே யார் முட்டாள், யாராவது தயவுசெய்து விளக்க முடியுமா?
எனது கேள்வி என்னவென்றால், படம் தணிக்கைக்கு செல்கிறது. அங்கு நான்கு உறுப்பினர்கள் பார்த்து அனுமதி வழங்குகிறார்கள். அதையும் தாண்டி இந்த குழுக்களும் பிரிவுகளும் எப்படி ஒரு படத்தை அணுக முடியும். இங்கு முழு சிஸ்டமுமே தவறாக உள்ளது. பஞ்சாப் 95, டீஸ், தடக் 2, புலே…. இது போன்று சாதியத்தை, பிராந்திய வாதத்தை, இனவெறியை, அரசாங்கத்தின் அஜெண்டாவை அம்பலப்படுத்தும் இன்னும் எத்தனை படங்கள் தடை செய்யப்படும் எனத் தெரியவில்லை. இந்த படம் என்ன பிரச்சனையை உண்டாக்குகிறது என்பதை கூட அவர்களால் வெளிப்படையாக பேச முடியவில்லை.” எனக் கொந்தளித்துள்ளார்.