Connect with us

இலங்கை

விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாங்கொல்லை காணிகளும் இராணுத்தின் பிடியிலேயே!

Published

on

Loading

விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாங்கொல்லை காணிகளும் இராணுத்தின் பிடியிலேயே!

வேலிவரை சென்றும் உட்செல்லமுடியாத நிலை; இரண்டு வருடங்களாகத் தொடரும் ஆக்கிரமிப்பு
47 குடும்பங்கள் தொடர்ச்சியாக அந்தரிப்பு

காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலைக்கு அருகாகவுள்ள, ‘மாங்கொல்லை’ காணிகளை, 2023ஆம் ஆண்டு மத்திய பகுதியில் விடுவிப்பதாக அறிவித்துள்ள போதிலும், அந்தக் காணிகள் இன்னமும் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படாமல் இராணுவத்தின் பிடியில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

காங்கேசன்துறை மேற்கு, ஜேஃ233 கிராம அலுவலர் பிரிவிலுள்ள 23 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட 47 பேருக்குச் சொந்தமான குறித்த காணிகள் 2023ஆம் ஆண்டு நடுப்பகுதியில் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், சிமெந்துத் தொழிற்சாலையில் பாதுகாப்புக் கடமையில் இருந்த இராணுவத்தினரின் தேவைகருதி அந்தக் காணிகளிலும் 13 ஏக்கர் நிலப்பகுதியே மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மிகுதி 10 ஏக்கர் நிலப்பரப்பும் சிமெந்துத் தொழிற்சாலையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுவந்த இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது சிமெந்துத் தொழிற்சாலை முதலீட்டுச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய முதலீடுகளை உள்வாங்கி, அடுத்தகட்டத்தை நோக்கிக் கொண்டுசெலும் முயற்சிகள் (நடைமுறைச் செயற்பாடுகள்) கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டுவந்த 10 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தின் பிடியிலேயே உள்ளன.

அந்தக் காணிகளில் உள்ள இரண்டு வீடுகளில் தற்போதும் இராணுவத்தினர் (சிமெந்துத் தொழிற்சாலையின் பாதுகாப்புக்காக இருந்தவர்கள்) தேவையற்ற விதமாகத் தங்கியுள்ளனர். இதனால், கண்களுக்கு எட்டக்கூடிய இடத்தில் தமது வீடுகள் இருந்தும், அவை விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டும் அவற்றுக்குச் செல்லமுடியாத நிலையே காணப்படுகின்றது என்று பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

அத்துடன், விடுவிக்கப்பட்ட 23 ஏக்கர் காணிகளில், பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட 13 ஏக்கர் பகுதிக்கும் உரிய பாதைகளும், இராணுவத்தால் தற்போது அடாத்தாகப் பிடித்துவைத்துள்ள பகுதியிலேயே அமைந்துள்ளன. இதனால், மேற்படி 13 ஏக்கர் பகுதியில் ஆதனங்களைக் கொண்ட மக்களும் தமது காணிகளுக்குள் செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது.

எனவே, இவ்வாறான போலி விடுவிப்புகளை மேற்கொள்ளாமல், தமது காணிகளை முற்றுமுழுதாகப் பயன்படுத்தும் வகையில் அவற்றை தம்மிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, ரணிலால் உறுமய திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட காணிகளும், இராணுவத்தின் பிடியில் தொடர்ச்சியாக உள்ளன என்ற விடயத்தை உதயன் நேற்று வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன