இந்தியா
பாண்லே நிர்வாக சீர்கேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர்

பாண்லே நிர்வாக சீர்கேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர்
தகுதி வாய்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து பாண்லே நிறுவனத்தை மீண்டும் நல்ல முறையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;புதுச்சேரி மாநிலத்தில் 1970 ஆம் ஆண்டுகளில் கிராமப்புற பால் உற்பத்தியாளர் சங்கங்களை இணைத்து உருவாக்கப்பட்ட பாண்லே நிறுவனம் ஜனநாயக முறையில் தலைவர்களை தேர்வு செய்து அறை நூற்றாண்டு காலம் வெற்றிகரமாக இயங்கி வந்தது. புதுச்சேரி மக்களுக்கு தேவையான பாலை புதுச்சேரியிலேயே கொள்முதல் செய்த காலம் மாறி, இன்று அண்டை மாநிலத்தில் அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளதும், ரூ. 24 கோடிக்கு மேல் கடனைத் தாங்கி தள்ளாடிக் கொண்டிருப்பதும் வேதனை அளிக்கிறது. இதற்கு நிர்வாக சீர்கேடும், எந்த நோக்கத்திற்காக ஆர்ப்பிக்கப்பட்டதோ அது சிதைக்கப்பட்டிருப்பதுமே காரணமாக உள்ளது.மாடு வளர்க்கின்ற விவசாயிகளுக்கும், பாண்லே நிறுவனத்திற்கும் தொடர்பில்லாத சூழலை உருவாக்கி பெயரளவில் இந்த சொசைட்டிகளை பயன்படுத்திக் கொண்டு வெளியில் பாலை வாங்கி விற்றுக் கொண்டிருக்கின்ற இடைத்தரகர்கள் வேலையைத்தான் இன்று பாண்லே நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது. அரசிடம் இருந்து தனிப்பட்ட மானியம் பெற்றும் நிறுவனம் கடனில் தத்தளிப்பது வேடிக்கையாக உள்ளது.ஒன்றிய அரசின் கூட்டுறவு நிறுவனமான அமுல் நிறுவனம் புதுச்சேரி பாண்லே நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பால் பவுடர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பாதாம்பால் போன்ற பொருட்களை கொள்முதல் செய்வது என்று ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் பாண்லே நிர்வாகம் தன்னுடைய நிர்வாக திறமையின்மையின் காரணமாக இன்று அமுல் நிறுவனம் கொள்முதல் செய்துவந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதும், அமுல் நிறுவனம் தமக்கு தேவையான பொருட்களை வேறு மாநிலத்தில் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் பாண்லே நிறுவனம் உற்பத்தி பாதிக்கப்பட்டு மிகப் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்படும். இதற்கு பாண்லே நிர்வாகம் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.புதுச்சேரி அரசு இவ்விஷயத்தில் எப்போதும் போல் தயக்கம் காட்டாமல் சிறப்பு கவனம் செலுத்தி அமுல் நிறுவனம் வெளியேறுவதின் காரணத்தை கண்டறிந்து சரிசெய்து மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பித்து உயிர் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாண்லே நிறுவனத்தில் உற்பத்தியாகும் பொருட்களை தரமாக உற்பத்தி செய்வதும், பாண்லே பூத்களை மேம்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சொந்தமாக பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். சட்டமன்றத்தில் கூறியதுபோல் மாடு வளர்ப்பவர்களிடம் நேரிடையாக மாடு வாங்குவதற்கான மானியத்தை அளிக்க வேண்டும். கால்நடை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தீவன மானியம், அடர் தீவனம் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப நேரடி கருமுட்டை வைக்கக் கூடிய சூழலையும், பசுக்களுக்கு பெண் கன்றுகளை ஈன்றக்கூடிய ஊசியை போடக்கூடிய சூழலையும் உருவாக்கி வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் புதுச்சேரியில் பாலின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனங்களான பாப்ஸ்கோ, ஸ்பின்கோ, அமுதசுரபி போன்றவைகளை மூடியதுபோல் பல ஆயிரம் விவசாயிகளுக்கு வாழ்வளித்து வருகின்ற பாண்லே நிர்வாகம் மூடுவிழாவை நோக்கி செல்வதை தடுக்க வேண்டும். மக்கள் பயனடையும் பாண்லே நிறுவனத்தை காப்பது அனைவரின் கடமையாகும். பாண்லேவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் செயலை துணைநிலை ஆளுநரும், முதல்வரும் தடுத்து நிறுத்த வேண்டும். பாண்லே நிர்வாக சீர்கேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தகுதி வாய்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து பாண்லே நிறுவனத்தை மீண்டும் நல்ல முறையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.