பொழுதுபோக்கு
14 வருட இடைவெளி… மீண்டும் இணைந்தது எப்படி? சுந்தர்.சி பற்றி மனம் திறந்த வடிவேலு

14 வருட இடைவெளி… மீண்டும் இணைந்தது எப்படி? சுந்தர்.சி பற்றி மனம் திறந்த வடிவேலு
தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்டவர் வைகை புயல் வடிவேலு. இவரின் காமேடி காட்சிகள், காமெடி வசனங்கள் இன்று பிரபலமான மீம்ஸ்களாக வந்து கொண்டு இருக்கிறது. பல முன்னணி நடிகர்கர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கியுள்ள வடிவேலு, சத்யராஜ், பார்த்திபன் ஆகியோருடன் நடித்த காட்சிகள் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதேபோல் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வின்னர், லண்டன், உள்ளிட்ட பல படங்களில் வடிவேலுவின் காமெடி அசத்தலாக இருக்கும். குறிப்பாக சுந்தர்.சி நடித்த தலைநகரம், நகரம் உள்ளிட்ட படங்களில் சுந்தர்.சி வடிவேலு கூட்டணி பெரிய வரவேற்பை பெற்று காமெடியில் அசத்தியிருப்பார்கள். இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு, வடிவேலு – சுந்தர்.சி இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பிரிந்தனர்.இதில் வடிவேலு பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிய நிலையில், சுந்தர்.சி, விவேக், சந்தானம், சூரி, யோகிபாபு, ஆகிய காமெடி நடிகர்களுடன் கூட்டணி அமைத்து தனது படங்களை இயக்கி வந்தார். அதேபோல் வடிவேலு நடிப்பில் வெளியாக கத்தி சண்டை, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட படங்களில், வடிவேலுவின் காமெடிகள் அவ்வளவாக ரசிகர்ளை ஈர்க்கவில்லை. அதே சமயம் மாமன்னன் படத்தில் அவரின் கேரக்டர் பாராட்டுக்களை பெற்றிருந்தது.சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகரம் மறுபக்கம் என்ற படம் தான் வடிவேலு – சுந்தர்.சி கூட்டணியில் வெளியான கடைசி படமாகும். இந்த படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பிறகு 14 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கி வரும் கேங்கர்ஸ் என்ற படத்தில் வடிவேலு – சுந்தர்.சி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய வடிவேலு கூறுகையில், எங்களுக்குள் என்ன பிரச்னை என்று தெரியவே இல்லை. ஒரு சிறிய நூலளவு தான் பிரச்னை என்று நினைக்கிறேன். ஆனால் இடையில் இருந்தவர்கள் கொளுத்திப்போட்டு விட்டார்கள். ஆனால் 14 வருடங்கள், இடைவெளி என்பது எனக்கு தெரியவில்லை 4-5 வருடங்கள் இடைவெளி என்று தான் தோன்றுகிறது. சினிமாவில் ஒருவரை பற்றி மற்றொருவரிடம் தவறாக சொல்லும் வழக்கம் இன்னும் இருக்கிறது என்று வடிவேலு கூறியுள்ளார்.அதன்பிறகு இருவரும் இணைந்தது எப்படி என்று கூறி வடிவேலு, என்னிடம் ஒரு இயக்குனர் கதை சொன்னார். நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். அந்த இயக்குனர் இந்த கதையில் சுந்தர்.சி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார், நானும் அவரும் பல படங்களில் நடித்திருக்கிறோம் எனக்கு ஒன்றும் இல்லை நடிக்கிறேன் என்று சொன்னேன். அடுத்து என்னை சந்தித்த சுந்தர்.சி இந்த படத்தை அப்புறம் பண்ணிக்கலாம். முதலில் நாம் ஒரு படம் பண்ணுவோம் என்று சொன்னார். அந்த படம் தான் கேங்கர்ஸ்.படத்திற்கு கதை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று நான் கேட்டபோது, கவலையே படாதீங்க, அரண்மனை படத்தின் கதை பல இருக்கிறது. அதில் எதாவது ஒன்றை எடுப்போம் என்று சொன்னதாக வடிவேலு கூறியுள்ளார். வடிவேலுவுடன் மீண்டும் இணைந்தது குறித்து பேசிய சுந்தர்.சி, நாங்கள் இருவரும் 14 வருடங்கள் பிரிந்தது போல் எனக்கு தோன்றவில்லை. 2 நாட்களுக்கு முன்பு நகரம் படத்தை முடித்துவிட்டு இப்போது இந்த படத்தில் இணைந்தது போல் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.