பொழுதுபோக்கு
போதை பொருள் பயன்படுத்திய வழக்கு: ‘குட் பேட் அக்லி’ வில்லன் நடிகர் கைது

போதை பொருள் பயன்படுத்திய வழக்கு: ‘குட் பேட் அக்லி’ வில்லன் நடிகர் கைது
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில், வில்லனாக நடித்த பிரபல மலையாள நடிகர், ஷைன் டாம் சாக்கோ கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மலையாளத்தில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர், ஷைன் டாம் சாக்கோ. கடந்த 2022-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இவர், அடுத்து லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். தசரா, தேவரா உள்ளிட்ட சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் வில்லனாக நடித்த இவர், மலையாளத்தில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே, போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவர் மீது, போதை மருந்துகள் பயன்படுத்தியது தொடர்பான (NDPS) சட்டத்தின் பிரிவுகள் 27 மற்றும் 29 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.காவல்துறையினர் பல மணி நேர அவரிடம் விசாரணை நடத்தியதில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஷைனுக்கு விரைவில் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஹோட்டலில் இருந்தபோது போலீசார் சோதனை செய்ய வந்ததுபோது இவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தியபோது, தனது வளர்ச்சி பிடிக்காத யாரோ தன்னைத் தாக்க வருகிறார்கள் என்று நினைத்து ஹோட்டலில் இருந்து தப்பி ஓடியதாக ஷைன் டாம் சாக்கோ போலீசாரிடம் கூறியதாகவும், அவர்கள் போலீஸ்காரர்கள் என்பது தனக்குத் தெரியாது என்று போலீசாரிடம் கூறியதாக தகவல்கள் வெளியானது. போதைப்பொருள் சோதனையின் போது ஹோட்டலை விட்டு வெளியே ஓடியதற்கான காரணத்தை நேரில் ஆஜராகி விளக்குமாறு நடிகருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அவர் இன்று காலை 10 மணியளவில் நிலையத்தில் ஆஜரானார். மற்றொரு நாள் கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீசார் நடத்திய போதைப்பொருள் சோதனையின் போது ஷைன் டாம் சாக்கோ அங்கிருந்து தப்பி ஓடினார். போலீசார் அறையை ஆய்வு செய்ய வந்தபோது, நடிகர் ஜன்னலிலிருந்து ஏறி ஹோட்டல் வரவேற்பறை வழியாக தப்பிச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகின.போதைப்பொருள் பயன்பாடு குறித்த தகவலின் அடிப்படையில் கொச்சி போதைப்பொருள் தடுப்பு ஏசிபியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகையின் புகார் குறித்து ஷைன் டாம் சாக்கோவிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், போதைப்பொருள் தொடர்பாக நடிகர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து கேரளா நடிகர் சங்கம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.