இந்தியா
விவசாய உதவித்தொகை பெறுவதற்கான வயது வரம்பை குறைக்க வேண்டும்; புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் கோரிக்கை

விவசாய உதவித்தொகை பெறுவதற்கான வயது வரம்பை குறைக்க வேண்டும்; புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் கோரிக்கை
மீனவர்களுக்கு வழங்கப்படுவது போன்று முதியோர் உதவித்தொகை பெறும் வயதை 55-லிருந்து 50- ஆக குறைத்து மீனவர்களுக்கு வழங்கப்படுவது போன்று மாதம் ரூ.3000 உதவித்தொகையாக விவசாயிகளுக்கும் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;புதுச்சேரி மாநிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பல்வேறு இன்னல்களுக்கும் இடையில் விவசாய தொழில் மூலம் தங்களது குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு பல்வேறு நலக்கிட்ட உதவிகளை செய்வதாக அறிவித்திருந்தாலும், காலம் தவறி அவர்களுக்கு வழங்கப்படும் திட்ட உதவிகளினால் பயனடைய முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.புதுச்சேரியில் கடந்த 2021-ல் தாங்கள் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதத்தில் நலத்திட்ட உதவிகளை பெறும் விண்ணப்பதாரர்களை அதிகப்படுத்தியும் நலத்திட்ட உதவிகளுக்கான நிதியை ஆண்டு தோறும் உயர்த்தியும் வருவது சிறப்பான ஒன்றாகும்.புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தமட்டில் முதியோர் உதவித் தொகை, விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மீனவ தொழிலாளர்கள், உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலும் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விவசாய தொழிலாளர்களுக்கும், விவசாயம் செய்பவர்களையும் பாதுகாக்கவும் நம் அரசில் விவசாய துறை தனியாக உள்ளது. அதற்கு பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.நம் மாநிலத்தில் சுமார் 17000 விவசாயிகளும், 30000-க்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்களும் உள்ளனர். தற்போது, 55 வயது நிறைவு பெற்றவர்களுக்கு முதியோர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.2000 வழங்கப்படுகிறது. இவ்வாண்டு பட்ஜெட்டில் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.மீனவர் தொழிலாளர்களுக்கு மீன்வளத்துறையின் மூலம் மீனவர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 50 வயது நிரம்பிய மீனவர்களுக்கு மாதம் சுமார் 2500 வழங்கப்பட்டு இவ்வாண்டு பட்ஜெட்டில் ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ.3000ஆக வழங்கப்பட இருக்கிறது. அதே போன்று 60 வயதிலிருந்து 69 வயது வரை தற்போது வழங்கப்படும் ரூ.3000-துடன் ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ.3500 ஆக வழங்கப்பட உள்ளது. 70 வயதிலிருந்து 79 வயது வரை உள்ள மீனவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 3500-லிருந்து ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ4000 வழங்கப்பட உள்ளது.மீனவர்களுக்கு வழங்கப்படுவது போன்று முதியோர் உதவித்தொகை பெறும் வயதை 55-லிருந்து 50- ஆக குறைத்து மீனவர்களுக்கு வழங்கப்படுவது போன்று மாதம் ரூ.3000 உதவித்தொகையாக விவசாயிகளுக்கும் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று வயதின் அடிப்படையில் மீனவர்களுக்கு வழங்கப்படுவது போன்று விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.முதலமைச்சர் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலன் கருதி மீனவ சமுதாய மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை பெறக்கூடிய வயது மற்றும் நிதியுதவியை விவசாயிகளுக்கும் வழங்கிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அன்பழகன் அந்த மனுவில் கூறியுள்ளார்.