இலங்கை
ஏப்ரல் 21 தாக்குதல்! 6 வருடங்கள் நிறைவு: விசாரணைகள் சற்று துரிதப்படுத்த வேண்டும்

ஏப்ரல் 21 தாக்குதல்! 6 வருடங்கள் நிறைவு: விசாரணைகள் சற்று துரிதப்படுத்த வேண்டும்
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 3 தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரதான விருந்தகங்கள் என்பவற்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுஇன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகிறது.
பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நாளை காலை 7 மணிக்கு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் இருந்து பிரார்த்தனை ஊர்வலம் தொடங்கி, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை சென்றடையும்.
காலை 8:30 க்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் விசேட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
காலை 8:45 க்கு, அனைத்து மத ஸ்தலங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை ஏப்ரல் 21 தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சிகளாக அங்கீகரிப்பதற்கு வத்திக்கான் தீர்மானித்துள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித்தினால் பாப்பரசர் பிரான்சிஸிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரம் தொடர்பான பிரகடனம் இன்று மாலை 5:30 க்கு கட்டுவாபிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் அறிவிக்கப்படும் என பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற விசாரணைகள் தொடர்பில் திருப்தியடைவதாக கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய விசாரணைகள் சற்று துரிதப்படுத்த வேண்டும் என்பது தமது நிலைப்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னதாக, மறைக்கப்பட்ட முக்கிய சில விடயங்களை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி கூறியிருந்தார்.
எனவே, ஜனாதிபதி கூறிய விடயம் தொடர்பில் நம்பிக்கை கொண்டுள்ள கத்தோலிக்க சமூகம், அதனை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
லங்கா4 (Lanka4)
(வீடியோ VIDEO)
அனுசரணை