இலங்கை
குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை – விசேட குழு விசாரணை

குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை – விசேட குழு விசாரணை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிக்கையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும், ஆவணங்கள் அடங்கிய தொகுதிகளும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறுப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயங்களை விசாரிக்க குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஆறாம் ஆண்டு நிறைவில், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பாக சுயாதீனமான மற்றும் பாரபட்சமான விசாரணையை உறுதி செய்வதில் அரசாங்கம் வெற்றிபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதகதியில் புதிய திசையில் முன்னெடுக்கப்பட்டன.
இந்தக் குற்றத்தைக் கால ஓட்டத்தில் மறைந்து விடாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கியுள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.