இலங்கை
அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடைசியாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது என ஊடகவியலாளரும் செங்கலடி தளவாய் வட்டார தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான செ.நிலாந்தன் தெரிவித்தார்.
21ஆம் திகதி திங்கட்கிழமை செங்கலடி – புலையவெளி பகுதியில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற மிக மோசமான இந்த பயங்கரவாத தாக்குதலால் சுமார் 260 மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள்.
இன்றுவரை அவர்கள் எதற்காக கொல்லப்பட்டார்கள், ஏன் பலியானார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.
இன்று ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசினால் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த முடியவில்லை.
கடைசியாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடாத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என கூறி மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தனர்.
அவர்களிடம் ஜனாதிபதி பதவியை கொடுத்துள்ளோம், பாராளுமன்ற பெரும்பான்மையை கொடுத்துள்ளோம் அதனை வைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியவில்லை. தற்போது அவர்கள் உள்ளூராட்சி சபையின் அதிகாரங்களை தங்களுக்கு தருமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தை வைத்து செய்யமுடியாதவர்கள் உள்ளூராட்சி சபைகளை வைத்து என்ன செய்ய போகின்றனர்.
அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஜனாதிபதி ஆகி ஒரு வருடங்கள் ஆகிய நிலையில் அவர் இந்த ஆறாவது ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்திய உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடித்து உலகிற்கு காட்டுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இதுவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை.
ஏய்தவர்கள் இருக்கும் போது அம்புகளை கைது செய்யும் நிலையே காணப்படுகிறது.
பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ச்சியாக உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடத்திய சூத்திரதாரிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இலங்கை கிரிஸ்தவ மக்களை தொடர்ச்சியாக இந்த அரசும் ஏமாற்றி வருகிறது.
தாங்க ஏன் கொல்லப்பட்டோம் எதற்காக கொல்லப்பட்டோம் என்று தெரியாமலே சில குழுக்களின் சில தேவைகளுக்காக பலி கொடுக்கப்பட்ட உயிர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமாக இருந்தால் ஏழாவது உயிர்த்த ஞாயிறு நினைவு தினத்திலாவது இந்த மக்கள் ஏன் கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள்? யாருக்காக கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை கண்டுபித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.