இலங்கை
கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகளை அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 சந்தேக நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அன்றிலிருந்து, இந்த வழக்கின் பிரதிவாதியான வைத்தியர் ஜயநாத் புத்பிட்டிய இதுவரையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக மூன்று நீதிபதிகள் கொண்ட நிரந்தர நீதாயமொன்றை நியமிக்குமாறு கோரி, சட்டமா அதிபர் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.