
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 22/04/2025 | Edited on 22/04/2025

ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சுரானா குழுமம் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒரே மனையை போலியான ஆவணங்கள் மூலம் பலருக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்திருந்தார்.
இதற்காக அவர் ரூ.3.4 கோடி காசோலையாகவும், ரூ.2.5 கோடி ரொக்கமாகவும் மொத்தம் ரூ.5.9 கோடி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணம் அந்நிறுவனங்கள் செய்த மோசடி பணம் மூலம் பெற்றிருக்கலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதனால் அது குறித்து விசாரிக்க வரும் 28ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் மகேஷ் பாபு ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபுவிற்கு மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டிஸ் அனுப்பியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ் பாபு இப்போது ராஜமௌலி இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.