நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 23/04/2025 | Edited on 23/04/2025

இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் தன்னுடைய அனுமதி இன்றி தனது பாடல்களை பயன்படுத்தியதாகப் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தார். அதற்கு முன்பாக மஞ்சும்மெல் பாய்ஸ், கூலி உள்ளிட்ட பல்வேறு பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு காப்புரிமை தொடர்பாக நோட்டிஸ் அனுப்பியிருந்தார். 

இந்த விவகாரம் பேசு பொருளாகவே இருந்து வரும் சூழலில் இளையராஜாவின் தம்பி, இயக்குநர் கங்கை அமரன் சமீபத்திய நிகழ்வு ஒன்றில், “ரூ.7 கோடி சம்பளத்துக்கு ஒரு மியூசிக் டைரக்டரை புக் பன்றாங்க. ஆனால் அவர்கள் போடுற பாட்டை விட நாங்க போட்ட பாட்டுதான் கைதட்டல் பெறுகிறது. அப்போது அதற்கான கூலி எங்களுக்கு வர வேண்டும் அல்லவா. அனுமதி கேட்டால் கொடுத்து விடுவோம். கேட்காமல் போடுவதுதான் இளையராஜாவுக்கு கோவம் வருகிறது” என்று பேசியிருந்தார். மேலும் குட் பேட் அக்லி படம் தொடர்பாக அஜித் படம் என்றெல்லாம் ஒன்னுமில்லை எங்க பாட்டுனால் தான் படம் ஹிட்டானது என்ற தொனியில் பேசியிருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.  

Advertisement

இந்த நிலையில் கங்கை அமரன் கருத்து குறித்து அவரது மகனும் நடிகருமான பிரேம்ஜி தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் நடித்த வல்லமை படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் பேசியதாவது, “பெரியப்பாவின்(இளையராஜா) காப்புரிமை விவகாரம் போய்கொண்டிருக்கிறது. அதற்கு அப்பா(கங்கை அமரன்) அவர் அண்ணனுக்காக சப்போர்ட் பண்ணி பேசுறார். இப்போ என் அண்ணனைப் பற்றி எதாவது பிரச்சனை வந்தால் நான் சப்போர்ட் பண்ணி பேசுவேன்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ராயல்டி என்பது இசையமைப்பாளரைத் தாண்டி எல்லாருக்குமே இருக்கும். அவரவர்களின் பாடல்களை கேட்கும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு ராயல்டி போகும். எனக்கும் நான் இசையமைத்த பாடல்களுக்காக மாதம் மாதம் ராயல்டி வந்து கொண்டிருக்கிறது. பெரியப்பா அவர் கம்போஸ் பண்ண பாடலுக்கு கேட்கிறார். மற்றபடி அது குறித்து விரிவாக எனக்கு எதுவும் தெரியாது” என்றார். 

அவரிடம் இளையராஜாவால் தான் குட் பேட் அக்லி படம் ஓடியதாக கங்கை அமரன் சொன்னது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. உண்மை அனைவருக்கும் தெரியும். அஜித்தால் தான் அந்த படம் ஓடியது” என்றார்.