பொழுதுபோக்கு
‘ஒரு இஸ்லாமியர் எப்படி மகாபாரத தொடரை எழுத முடியும்?’; கேள்வி எழுப்பிய தூர்தர்ஷன்: ராஹி மசூமுக்கு ஆதரவாக இருந்த பி.ஆர். சோப்ரா

‘ஒரு இஸ்லாமியர் எப்படி மகாபாரத தொடரை எழுத முடியும்?’; கேள்வி எழுப்பிய தூர்தர்ஷன்: ராஹி மசூமுக்கு ஆதரவாக இருந்த பி.ஆர். சோப்ரா
பெரிய திரையில் மகாபாரதத்தை தயாரிப்பதில் ஆர்வமாக இருப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பு, அமீர்கான் சூசகமாக கூறினார். இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், பலரும் இதற்கு விமர்சனம் கூறினர். ஒரு முஸ்லிம் மகாபாரதத்தை உருவாக்க விரும்புவதற்கு, இந்துக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் தனது எண்ணத்தை அமீர்கான் மீண்டும் நினைவு கூர்ந்தார். 37 ஆண்டுகளுக்கு முன்பு, பி.ஆர். சோப்ரா மகாபாரதத்தை உருவாக்கியபோது, அந்த நிகழ்ச்சியை எழுதுவதற்கு ராஹி மசூம் ராசா என்ற முஸ்லிம் எழுத்தாளரை நியமித்ததால் அவர் இதே போன்ற எதிர்ப்பை எதிர் கொண்டார். ஆங்கிலத்தில் படிக்கவும்: Mahabharat: BR Chopra stood by Rahi Masoom Raza when Doordarshan questioned how a Muslim man could write the show, ‘It’s not Hindu or Muslim’ இந்தியத் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்பட்டவர் பி.ஆர். சோப்ரா. அவர் 1950 களில் திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். 1980 களில் தான் ராமாயணம் அல்லது மகாபாரதத்தை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உருவாக்க தூர்தர்ஷன் அவரை அணுகியது. அவர், மகாபாரதத்தை உருவாக்க தேர்வு செய்தார். “ஒவ்வொரு தயாரிப்பாளரும் மகாபாரதத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு காண்கிறேன். நானும் அதைத் தயாரிக்க விரும்பினேன். ஆனால், அதை உங்களால் மூன்று மணி நேரப் படத்தில் எடுக்க முடியாது என்று எனக்குத் தெரியும். நீங்கள் அதை உருவாக்க விரும்பினால், அதை நீண்ட வடிவத்தில் உருவாக்க வேண்டும். அதற்கு ஒரே வழி தொலைக்காட்சி தொடர் தான்” என்று அவர் கூறினார். ராமாயணத்துடன் ஒப்பிடும்போது மகாபாரதம் ஒரு பெரிய சவால் என்று சோப்ரா நம்பினார். ஏனெனில், அதில் நிறைய கதாபாத்திரங்களில் நன்மை மற்றும் தீமை ஆகிய இரு குணங்களும் நிறைந்திருக்கும். எனவே, மகாபாரதத்தை உருவாக்குவதற்கு அதனை சரியாக எழுதுவது முக்கியம் என்று பி.ஆர். சோப்ரா கருதினார். எனவே, இத்தகைய சவாலான தொடரை எழுதுவதற்கு ராஹி மசூம் ராசா சரியான தேர்வாக இருப்பார் என்று பி.ஆர். சோப்ரா நம்பினார். ஆனால், எதிர்பார்த்தது போலவே ராஹியை எழுத்துக் குழுவில் சேர்த்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பி.ஆர் பிலிம்ஸ் சமர்ப்பித்த எபிசோட்களின் திட்டத்தை தூர்தர்ஷன் பார்த்தபோது, அவர்கள் பெரும் திருப்தி அடைந்தனர். ஆனால் ஒரு முஸ்லிம் எப்படி இந்த நிகழ்ச்சியை எழுதுவார் என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைத்தனர். இது தொடர்பாக பி.ஆர். சோப்ரா மற்றும் தூர்தர்ஷன் இடையே நடந்த உரையாடலை, அவரது மருமகள் ரேணு கபில் ஷர்மா ஷோவில் நினைவு கூர்ந்தார். அதன்படி, “மகாபாரதம் என்பது இந்து – முஸ்லிம் குறித்தது அல்ல. அது அனைத்து குடும்பத்தின் கதை. ஒவ்வொரு குடும்பத்திலும் பிரச்சனை இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மகாபாரதம் இருக்க வேண்டும். இதன் மூலம் என்ன செய்யக் கூடாது என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள். இதில் இருந்து ராஹியை நீக்க நினைத்தால், இத்திட்டத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்” என்று பி.ஆர். சோப்ரா கூறியுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில், ராஹி தனக்கு வந்த அச்சுறுத்தல்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். “நான் ஒரு இந்தியன் இல்லையா? ஒரு முஸ்லிம், இந்த தொடருக்கான கதையை எழுதுவதற்கு எழுந்த எதிர்ப்பு குறித்து நான் வருத்தம் அடைந்தேன். அந்த மிரட்டல்கள் குறித்து நான் கவலை கொள்ளவில்லை” என்று அவர் கூறியிருந்தார்.அன்றைய காலகட்டத்தில் ராஹி மசூம் ராசா உருவாக்கிய மகாபாரத தொடர் இன்று வரை சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. அதனை பார்த்து இன்றைய அமீர்கான் வரை பலரும், அதைப் போல உருவாக்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றனர். ஒருவேளை இதனை உருவாக்கும் பணியில் அமீர்கான் ஈடுபட்டால், நிச்சயம் பி.ஆர். சோப்ரா உருவாக்கிய மகாபாரதத்துடன் அதனை ஒப்பிடுவார்கள்.