பொழுதுபோக்கு
‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்கு அஜித் மட்டுமே காரணம் – தந்தைக்கு பதிலடி கொடுத்த பிரேம்ஜி

‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்கு அஜித் மட்டுமே காரணம் – தந்தைக்கு பதிலடி கொடுத்த பிரேம்ஜி
‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்கு அஜித் மட்டுமே காரணம் என்றும், இளையராஜாவின் பாடல்களால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை என்றும் பிரேம்ஜி அமரன் தெரிவித்துள்ளார்.கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாக ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.முன்னதாக, இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து, தன்னிடம் உரிய அனுமதி பெறாமல், தன்னுடைய பாடல்களை ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜா சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பினார். மேலும், அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்தியதால், தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.ஆனால், இப்பாடல்கள் இருக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெற்ற பின்னரே அவற்றை பயன்படுத்தியதாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படக் குழுவினர் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது. இந்த சூழலில் நிகழ்வு ஒன்றில் பேசிய இசையமைப்பாளரும், இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வெற்றிக்கு, இளையராஜாவின் பாடல்கள் தான் காரணம் என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார்.அதன்படி, “ரூ. 7 கோடி கொடுத்தும் உங்கள் இசையமைப்பாளரிடம் இருந்து வாங்க முடியாத இசையை, எங்களிடம் இருந்து எடுத்து பெயர் கூடா போடாமல், வரவேற்பை பெற்றுள்ளீர்கள். அந்த இசையில் எங்களுக்கும் பங்கு உண்டுதானே? அதற்கான கூலி எங்களுக்கு வரணும் தானே? எங்களுக்கு பணத்தாசை இல்லை. எங்களிடம் செலவு செய்ய முடியாத அளவில் பணம் கொட்டிக் கிடக்கிறது. அனுமதி கேட்டால் அண்ணன் உடனே கொடுத்து விடுவார். அஜித் படம் என்பதால் கேட்கவில்லை. எங்கள் இசை என்பதால் கேட்கிறோம். முடிந்தால் உங்கள் இசையமைப்பாளரை வைத்து இப்படி ஒரு பாடலை போட சொல்லுங்கள்” என்று கூறினார்.இந்நிலையில், கங்கை அமரனின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அவரது மகன் பிரேம்ஜி அமரன் பேசியுள்ளார். சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் பிரேம்ஜி அமரன் பங்கேற்றார். அப்போது, கங்கை அமரனின் கருத்து குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “காப்புரிமை விவகாரம் தொடர்பாக தன்னுடைய அண்ணனுக்கு, எனது தந்தை ஆதரவு அளித்துள்ளார்.இதுவே என்னுடைய சகோதரர் குறித்து யாராவது பேசினால், அவருக்கு உறுதுணையாக நான் நிற்பேன். அந்த வகையில் தான் என் தந்தை பேசியிருந்தார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களால் தான் ஓடியது என்று கூறி விட முடியாது. உண்மை என்னவென்று எல்லோருக்குமே தெரியும். அஜித்தால் தான் அப்படம் வெற்றி பெற்றது” என பிரேம்ஜி தெரிவித்தார்.இதன் மூலம் கங்கை அமரனுக்கு, அவரது மகன் பிரேம்ஜி பதிலடி கொடுத்ததாக இணையவாசிகள் கூறுகின்றனர்.