இலங்கை
தபால் மூல வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

தபால் மூல வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளன என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, எதிர்வரும் 24ஆம், 25ஆம் திகதிகளில் (நாளை, நாளைமறுதினம்) தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையடைந்துள்ளன. வாக்குப் பெட்டிகளை உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
தபால் மூல வாக்களிப்பின்போது, ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டையைச் சமர்ப்பிப்பதற்கான தெரிவு முன்னதாக வழங்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் பதிவான சில சம்பவங்களைக் கருத்திற்கொண்டு இம்முறை அது தவிர்க்கப்பட்டுள்ளது.
எனவே, அலுவலக அடையாள அட்டையை ஆள் அடையாள ஆவணமாகச் சமர்ப்பிக்கின்ற தபால் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டை அடையாளமிட வாய்ப்பளிக்கக்கூடாது. இந்த நடைமுறை மிகவும் இறுக்கமாகப் பின்பற்றப்படும். தபால் மூல வாக்களிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் கடவுச்சீட்டு, தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்தல் கடிதம் ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்று தபால் மூல வாக்களிப்பின்போது ஏற்றுக்கொள்ளப்படும் – என்றார்.