
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 25/04/2025 | Edited on 25/04/2025

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
இப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை மட்டும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.பாக்யராஜ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் டி.சிவா, பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி, நடிகை வனிதா விஜயகுமார், நமீதா, தயாரிப்பாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “இது நம்முடைய குடும்ப நிகழ்வு போல தான். நான் வரும்போது என்னை வரவேற்ற தேவயானி, நீங்கள் வந்ததற்கு நன்றி என்றார். ஆனால் நான் சொன்னேன் நீங்கள் இந்த படத்தில் நடித்ததற்கு நன்றி என்று. காரணம் முன்பு கே.ஆர் விஜயா, அடுத்து ரேவதி ஆகியோரைப் போல இப்போது தேவயானி நடித்தால் அது நல்ல படமாக தான் இருக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப நல்ல படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் பெயரை பதிவு செய்யும் விதமாக நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். பணம் வருகிறதே என்பதற்காக எல்லா படங்களையும் ஏற்றுக் கொண்டு தன்னுடைய பெயரை ஒருபோதும் அவருக்கு கெடுத்துக் கொண்டதில்லை. அந்த நற்பெயர் தான் 30 வருடம் கழித்தும் இவர் கதாநாயகியாக நடிப்பதற்கு காரணம். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்து விடாதே.
தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு ஒரு நல்ல வெற்றிப்படம் தரவில்லை என்கிற குற்ற உணர்வு இப்போதும் எனக்கு இருக்கிறது. தம்பி படத்துக்கு அடுத்தபடியாக பகலவன் என்கிற படத்தை அவருக்காக எடுக்க இருந்தேன். ஆனால் மாதவன் அதில் நடிக்க மறுத்துவிட்டார். காரணம் தம்பி படத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் தான் ஆனால் அதன்பிறகு தான் வாழ்த்துக்கள் படத்தை அவருக்காக இயக்கினேன். ஆனால் படம் சரியாக போகவில்லை. இந்த இடத்தில் சொல்கிறேன், என்றைக்காவது ஒருநாள் அவருக்கு ஏற்பட்ட இழப்பை நான் சரி செய்வேன். கே.எஸ் அதியமான் போன்ற இயக்குநர்கள் இப்போது ரொம்ப குறைவு. தாலியை கழற்றி எறிந்து விட்டு இன்னொரு நபருடன் புரட்சி திருமணம் செய்யும்படி கதை எழுதியவரும் பாக்கியராஜ் தான். அதே தாலியை கழட்ட மாட்டார்கள் அதுதான் கலாச்சாரம் என்று ஒரு கதையை எழுதி அதையும் வெற்றி படமாக்கியவர் நம் பாக்யராஜ் காரணம். அவரது எழுத்தின் வன்மை அப்படி.
எளிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு குடும்பப்பாங்கான படமாக கொடுத்து வெற்றி அடைய வேண்டும் என்றால் அது அவரால் மட்டும் தான் முடியும். கே.எஸ் கோபாலகிருஷ்ணன் போல பாக்கியராஜ் நம் திரை உலகில் ஒரு மைல் கல். அவர் நம் கூட இருக்கிறார் என்பதே பெருமை. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு பெண் பாடலாசிரியர் பாடல் எழுதியிருப்பது பெருமையாக இருக்கிறது. பெரிய படம் சின்ன படம் என்கிற அளவு எல்லாம் இல்லை. ஓடுகிற படம், ஓடாத படம் அவ்வளவுதான்.. தெலுங்கில் ஆறு கோடியில் எடுக்கப்பட்ட கோர்ட் என்கிற படம் 60 கோடி வசூலித்துள்ளது. இந்த நிழற்குடை படம் நிச்சயம் வெல்லும். தியேட்டர்கள் இந்தப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கான சூழல் இப்போது இல்லை. ஆனால் விரைவில் அதற்கான சூழல் வர இருக்கிறது. பெரிய பெரிய வளாகங்களில் சின்ன படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சட்டம் வரும். பல இரவுகள் பசி பட்டினியுடன் கிடந்து இந்த சினிமாவை நேசித்தவர்கள் நாங்கள். அவ்வளவு எளிதாக சினிமாவை அழிய விட்டுவிட மாட்டோம். செல்வமணி சொன்னது போல விவசாயி, தயாரிப்பாளர் இருவருமே தங்களது உற்பத்திக்கான விலையை தீர்மானிக்கும் காலத்தை உருவாக்குவோம்.
சிவா ஆறுமுகம் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் என்ன நடந்தாலும் கூட சினிமாவை விட்டு அவர் வெளியேறவில்லை. அவரது மகனும் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். துவங்குவது எல்லோருக்கும் எளிது தான். ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து போராட வேண்டும். அதற்காகவே அவரை பாராட்ட வேண்டும். அய்யா ரஜினிகாந்தை தூரத்தில் இருந்தே பார்த்து வந்த நிலையில் நேரில் பார்க்கும் வாய்ப்பு வந்தது. இரண்டரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இவ்வளவு படம் நடித்து, இவ்வளவு சாதித்த பிறகும். புதிதாக ஒன்றை தெரிந்து கொள்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை பார்க்கும்போது இவர் ஏன் ஜெயிக்க மாட்டார் என நமக்கே தோணும். என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் இருங்கள் என்று கூறிவிட்டு அவர் உள்ளே நடந்து சென்றபோது சினிமாவில் படத்தில் பார்க்கும் அதே வேகம் தான் நிஜத்திலும் அவரிடம் இருந்தது. சோம்பேறிகள் கூட அவர் இயங்குவதை பார்த்தால் உற்சாகமாகி விடுவார்கள் இந்த தேடலும் வெறியும் இருக்கும் ஒவ்வொருவரும் உச்சத்தை தொடலாம் சாதிக்கலாம்” என்றார்.