
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 25/04/2025 | Edited on 25/04/2025

பொன்னியின் செல்வன் பட இரண்டாம் பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘வீரா ராஜ வீர…’ பாடல் சர்ச்சையில் சிக்கியது. இப்பாடலுக்கு எதிராக கர்நாடக இசை பாடகர் வாசிஃபுதீன் தாகர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இப்பாடல் தன் தந்தை இயற்றிய சிவா ஸ்துதி பாடல் போல் உள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலாக ‘வீரா ராஜ வீர’ பாடலை உருவாக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது வீரா ராஜ வீர பாடல் சிவா ஸ்துதி பாடலில் இருந்து உந்துதல் பெற்று உருவாக்கியது மட்டுமல்லாமல் அதை போன்றே இருக்கிறது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழு தரப்பு 2 கோடி ரூபாயை நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாடகர் தரப்புக்கு 2 லட்சம் ரூபாயை கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காப்புரிமை விவகாரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட இந்த உத்தரவு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.