இலங்கை
சிறுவனை வைத்து தவறான வீடியோவை உருவாக்கிய ஒருவர் கைது

சிறுவனை வைத்து தவறான வீடியோவை உருவாக்கிய ஒருவர் கைது
இலங்கையைச் சேர்ந்த சிறுவன் ஒருவரின் தவறான காட்சிகளை உருவாக்கிய சந்தேக நபர் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் தொடர்பாக அமெரிக்க அரசின் காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கான தேசிய மையம் (NCMEC) மூலம் அனுப்பப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அதன்படி, 2025.04.20 அன்று சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியக அதிகாரிகள் குழுவினால் ஆணமடுவ பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் (வயது 34) ஆணமடுவ, ஆடிகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஒரு கைபேசி பழுது பார்க்கும் நிலையத்தை நடத்தி வருபவராவார்.
இந்த சந்தேக நபர் 2022 ஆம் ஆண்டு முதல் இணையம் ஊடாக வெளிநாட்டு சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சேகரித்து பார்த்து வந்துள்ளார்.
அத்துடன் இலங்கையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவரின் வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் மேற்கொண்டு வருகிறது.