பொழுதுபோக்கு
17 வயதில் அறிமுகம்; ஒரே நடிகருடன் 107 படங்கள்; 2 முதல்வர்களுடன் ஜோடி: இந்த நடிகை யார் தெரியுதா?

17 வயதில் அறிமுகம்; ஒரே நடிகருடன் 107 படங்கள்; 2 முதல்வர்களுடன் ஜோடி: இந்த நடிகை யார் தெரியுதா?
தனது 17 வயதில் சினிமாவில் அறிமுகமாகி சுமார் 480 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை ஒருவர், 2 மாநில முதல்வர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த நடிகை யார் தெரியுமா? அவர் தான் செம்மீன் ஷீலா.1945-ம் ஆண்டு, கேரளாவில் பிறந்த இவர், தனது 17 வயதில் 1962-ம் ஆண்டு, பாக்யசித்தகம் என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதே ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் தமிழில் வெளியான பாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷீலா, அடுத்து எம்.ஜி.ஆருடன் சில படங்களில் நடித்திருந்தார். மேலும், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுடனும் நடித்துள்ளார்.1995-ம் ஆண்டு வெளியான பம்பாய் படத்தில் நடித்திருந்த ஷீலா 10 வருட இடைவெளிக்கு பிறகு 2005-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படத்தில், பிரபுவின் அத்தை அகிலாண்டேஸ்வரி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளத்தில் அப்போதைய சூப்பர் ஸ்டார் நடிகர் பிரேம் நசீருடன் இணைந்து 107 படங்கள் நடித்து கின்னஸ் சாதனை படைத்த ஷீலா, இன்றுவரை யாரும் முறியடிக்க முடியாத சாதனை செய்துள்ளார்.அதேபோல் தமிழில் எம்.ஜி.ஆருடன் நடித்த ஷீலா, தெலுங்கில் என்.டி.ஆருடன் இணைந்து நடித்தார். இவர்கள் இருவருமே பின்னாளில், முதல்வர்களாக முத்திரை பதித்தனர். 1966-ம் ஆண்டு மலையாளத்தில் சத்யன் நடிப்பில் வெளியான செம்மீன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷீலா நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அன்று முதல் செம்மீன் ஷீலா என்று அழைக்கப்பட்ட இவர், அழகிலும் நடிப்பிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.நடிப்பு மட்டுமல்லாமல், எழுத்தாளர், இயக்குனர், நாவல் ஆசிரியர், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர், ஓவியர் என பன்முக திறமைகளை உள்ளடக்கிய நடிகை செம்மீன் ஷீலா, காதலிக்க நேரமில்லை பட நடிகர் ரவிச்சந்திரனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜார்ஜ் விஷ்ணு என்ற ஒரு மகன் இருக்கிறார். தமிழில் காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜார்ஜ் விஷ்ணு, கடைசியாக சந்தானம் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் நடித்திருந்தார்.தற்போது 80 வயதை கடந்துள்ள நடிகை ஷீலா, கடைசியாக மலையாளத்தில் ‘அனுராகம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். யக்ஷகானம், சிகரங்கள் என இரு படங்களை இயக்கியுள்ள ஷீலா, தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவரது மகன் விஷ்ணு தமிழ், மலையாள சின்னத்திரை தொடர்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.