
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 27/04/2025 | Edited on 27/04/2025
சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகமொழி விழிகள்’. இசை கச்சேரிகளில் பாடல் பாடும் ஒரு இளைஞன், தன் காதலிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட, அதற்கெதிராக களமிறங்குகிறான். பார்வையில்லாத அவன் எதிரிகளை எப்படி பழி தீர்க்கிறான் என்பதை, முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், பரபர திருப்பங்களுடன் சொல்லி, ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் அட்டகாசமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன், தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ, தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சச்சு கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிக்கும் “அகமொழி விழிகள்” படத்தினை சசீந்திரா கே. சங்கர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் பின்னணி இசையைக் கையாண்டுள்ளார். மே மாதம் 9ஆம் தேதி தமிழகமெங்கும் இப்படத்தினை திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வினில் இயக்குநர் சசீந்திரா கே. சங்கர் பேசியதாவது, “இங்கு எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. திரைப்படத்தை, மனிதனை அரசியலை தூக்கிப் பிடிக்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. என் தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. என் கனவை புரிந்து நான் சொன்ன கதையை நம்பி இந்தப்படத்தை எடுக்க ஒரு தயாரிப்பாளர் முதலீடு செய்ய வேண்டுமெல்லவா, அது முக்கியம். ஒரு தயாரிப்பாளர் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. சினிமா தான் நம் இணைப்புக்கு ஊண்டுகோலாக இருக்கிறது. நான் மலையாளி ஆனால் என் பாட்டி தமிழ் தான். என் வேர் தமிழ் தான். மலையாளம் கன்னடம் தெலுங்கு எல்லாம் தமிழில் இருந்து வந்த மொழிகள் தான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மொழி. இந்த படத்தை உங்கள் கையில் கொடுத்து விட்டோம் வாழ வையுங்கள். என்னை இயக்குநராக்கியது தமிழ் தான். நான் இங்கு தான் பல ஆண்டுகளாக வேலை பார்த்தேன். இந்த மொழி வாழ வைக்கும் என நம்பிக்கையில் தான் இருக்கிறேன். அகமொழி விழிகள் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது, “அகமொழி விழிகள் பெயரே மிக அழகாக உள்ளது. தமிழ்த் தெரியாத தயாரிப்பாளர் தனது மொழியில் தமிழை எழுதி வைத்துப் படிக்கிறார். தமிழ் மீதான அவரது மரியாதை வியக்க வைக்கிறது. நான் சிவகாசி படமெடுத்த போது அப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது அப்போது தெலுங்கில் நடந்த விழாவில் நான் கலந்து கொண்டு பேச கஷ்டப்பட்டேன், இப்போது தான் புரிகிறது, நான் தமிழில் எழுதி வைத்துப் படித்திருக்கலாம். இப்படம் பாடல் விஷுவல்ஸ் எல்லாமே நன்றாக இருக்கிறது. தமிழ் சினிமா அழிந்து வருவதாகச் சொல்கிறார்கள். அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தியேட்டரில் டிக்கெட் எவ்வளவு விற்க வேண்டும் என நிர்ணயிக்கும் போது, பாப்கார்னும் இந்த விலைக்குத் தான் விற்க வேண்டும் என நிர்ணயிக்க வேண்டும். ஏன் இதை அரசாங்கம் செய்யக் கூடாது. மக்களுக்காகத் தானே அரசாங்கம். எப்போதும் கதையை நம்பி படமெடுங்கள். என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள், அப்படிப் படமெடுத்தால் ஓடாது. இந்தப்படம் சின்ன பட்ஜெட்டில் அசத்தியுள்ளார்கள். விஷுவல் பார்க்க பெயிண்டிங் மாதிரி உள்ளது. அத்தனை உழைத்துள்ளார்கள். இது மாதிரி படம் வெற்றி பெற வேண்டும் இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி” என்றார்.