விளையாட்டு
MI vs LSG LIVE Score: ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை-லக்னோ அணிகள் மோதல்!

MI vs LSG LIVE Score: ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை-லக்னோ அணிகள் மோதல்!
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் 2 இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.5 முறை சாம்பியனான மும்பை அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. அந்த அணி தனது கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி சரியான சமயத்தில் சிறந்த நிலைக்கு திரும்பி இருக்கிறது. மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (373 ரன்), திலக் வர்மா (233), ரோகித் சர்மா (228), ரையான் ரிக்கெல்டனும் (215), பந்து வீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, டிரென்ட் பவுல்ட், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ராவும் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள்.லக்னோ அணியும் 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியை அடைந்துள்ளது. அந்த அணி பேட்டிங்கில் வெளிநாட்டு நட்சத்திரங்களான நிகோலஸ் பூரன் (377 ரன்), மிட்செல் மார்ஷ் (344), மார்க்ரம் (326) ஆகியோரை அதிகம் நம்பி இருக்கிறது. ஆயுஷ் பதோனியும் ஓரளவு பங்களிப்பை அளிக்கிறார்.லக்னோவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்ட மும்பை அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன், தங்களது உத்வேகத்தை தொடர தீவிரம் காட்டும். அதேநேரத்தில் தங்களது ஆதிக்கத்தை நீட்டிக்க லக்னோ முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ அணி 6-1 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, விக்னேஷ் புத்தூர்.லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ்.