இந்தியா
‘போர் வேண்டாம்’ என சித்தராமையா கருத்து: தலைப்புச் செய்தியாக வெளியிட்ட பாகிஸ்தான் டிவி!

‘போர் வேண்டாம்’ என சித்தராமையா கருத்து: தலைப்புச் செய்தியாக வெளியிட்ட பாகிஸ்தான் டிவி!
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்தது. மேலும், பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது. மேலும் இருநாட்டு அரசுகளும் தங்கள் ராணுவ படைகளை தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளன. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவோம் என பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு, எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஆதரவு தரப்படும் என ராகுல் காந்தி கூறிய நிலையில், சித்தராமையாவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Karnataka CM Siddaramaiah’s anti-war remarks draw Oppn flakபஹல்காம் தாக்குதல் குறித்து கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் போரை ஆதரிக்கவில்லை. அமைதி நிலவ வேண்டும், மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்றும் சித்தராமையா பேசினார். “இது முக்கியமான கூட்டம் என்பதால் பிரதமர் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், இதைவிட பீகார் தேர்தல் பிரசாரம் அவருக்கு முக்கியமானது என்று தோன்றுகிறது. அவர் மக்களை முட்டாளாக்குகிறார்” என்று சித்தராமையா கூறினார்.அவரது பேச்சுக்கு பாஜகவினர் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், சித்தராமையாவின் கருத்தை பாகிஸ்தானில் உள்ள ஊடக நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் முன்னணி செய்தி நிறுவனமான ஜியோ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல்கள்” என்று குறிப்பிட்டு சித்தராமையாவின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.இந்த வீடியோவை, பா.ஜ.க.வைச் சேர்ந்த கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது: ‘பாகிஸ்தான் ரத்னா’ முதல்வர் சித்தராமையா அவர்களே… உங்கள் குழந்தைத்தனம், அபத்தமான அறிக்கையால் ஒரே இரவில் பாகிஸ்தானில் உலக புகழ் பெற்று உள்ளீர்கள். உங்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் எப்போதாவது பாகிஸ்தான் சென்றால், உங்களுக்கு அந்த நாட்டின் அரச விருந்தோம்பல் உறுதி. பாகிஸ்தானுக்காக வாதிட்ட ஒரு சிறந்த அமைதி துாதராக பாகிஸ்தான் அரசு, அந்த நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான நிஷான் – இ – பாகிஸ்தான் விருதை வழங்கி கவுரவித்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி சித்தராமையாவை கடுமையாக விமர்சித்தார். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு இந்தியா பாடம் புகட்ட வேண்டும் என்று பெரும்பாலான நாடுகள் விரும்புகின்றன. குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம், நமது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று சித்தராமையா கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சித்தராமையாவின் கருத்தை முன்னிலைப்படுத்தி பாகிஸ்தானில் ஒரு தொலைக்காட்சி சேனலின் வீடியோவைப் பகிர்ந்ததன் மூலம் மதச்சார்பற்ற ஜனதா தளம் சித்தராமையாவை தாக்கியது. “பாகிஸ்தான் மீதான உங்கள் அன்பு பாக். ஊடகங்களில் கூட கொண்டாடப்படுகிறது” என்று கூறியது. காங்கிரஸ் அரசின் திருப்திப்படுத்தும் அரசியல், நாட்டிற்கு எதிராக பேசத் தூண்டி உள்ளது என்று குற்றம் சாட்டியது.