உலகம்
கனடாவில் நான்காவது தடவையாக ஆட்சியமைத்தது லிபரல்

கனடாவில் நான்காவது தடவையாக ஆட்சியமைத்தது லிபரல்
கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிலையில், லிபரல் கட்சியினர் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக லிபரல்கள் அங்கு ஆட்சியமைத்துள்ளனர்.
லிபரல் கட்சிக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் பெரும் சரிவொன்று ஏற்பட்டிருந்தது. இதையடுத்து கன்சர்வேடிவ் கட்சிக்கு மக்கள் மத்தியில் சடுதியான ஆதரவு அதிகரித்தது. இந்த நிலையில், கட்சித் தலைமைப் பதவியில் இருந்து முன்னாள் பிரதமர் ட்ரூடோ விலக, கனேடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கார்னி லிபரல் கட்சிக்குத் தலைமையேற்றார்.
அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாகக் கனடாவை இணைப்பேன் என்று ட்ரம்ப் தொடர்ச்சியாகத் தெரிவித்துவந்த நிலையில், ட்ரம்பின் கருத்துக்களைத் தனக்குச் சாதகமாகக் கார்னி பயன்படுத்தினார். அவரின் தலைமைத்துவத்தின் கீழேயே லிபரல் கட்சியினர் அபார வெற்றியைப்பெற்று 4ஆவது தடவையாக ஆட்சியமைப்பதை உறுதிசெய்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை நாடாளுமன்றத் தீர்மானம் மூலம் ஏற்றுக்கொண்ட முதலாவது நாடாக கனடா அறியப்படுகின்றது. அது லிபரல் கட்சியின் கடந்த ஆட்சியிலேயே இடம்பெற்றது. அவர்களே தற்போது மீண்டும் ஆட்சியமைத்துள்ளனர்.