நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 10/05/2025 | Edited on 10/05/2025

இயக்குநராக அறிமுகமாகி நாயகனாக பயணிக்கும் பிரதீப் ரங்கநாதன், ‘டிராகன்’ படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதை தவிர்த்து தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். 

இப்படத்தை சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீர்த்திஸ்வரன் இயக்குகிறார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கேரள இளம் நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். மேலும் சரத் ​​குமார், ஹிருது ஹாரூன், டிராவிட் செல்வம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளராக இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். 

Advertisement

இப்படத்தின் அறிவிப்பு பூஜை வீடியோவுடன் கடந்த மார்ச்சில் வெளியானது. அதில் படப்பிடிப்பும் நடந்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. படத்திற்கு தலைப்பு வைக்காமலே தற்காலிகமாக பிரதீப் ரங்கநாதனின் 4வது படம் என்பதை குறிக்கும் விதமாக ‘பி.ஆர். 4’ என்ற பெயருடன் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில் படத்தில் தலைப்பு புது போஸ்டருடன் வெளியாகியுள்ளது. ‘டியூட்’(DUDE) என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் போஸ்டரில் கையில் தாலியுடன் முகம் மற்றும் கைகளில் ரத்த கறையுடன் பிரதீப் ரங்கநாதன் நிற்கிறார்.

அதோடு ரிலீஸ் அப்டேட்டையும் படக்குழு அதில் பகிர்ந்துள்ளது. இந்தாண்டு தீபாவளி வெளியீடாக இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே தீபாவளி வெளியீடாக மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியின் ‘பைசன்’ இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.