விளையாட்டு
போர் பதற்றம்; பாதியில் நின்று போன ஐ.பி.எல்: இங்கிலாந்தில் நடத்த பி.சி.சி.ஐ-யிடம் கோரிக்கை

போர் பதற்றம்; பாதியில் நின்று போன ஐ.பி.எல்: இங்கிலாந்தில் நடத்த பி.சி.சி.ஐ-யிடம் கோரிக்கை
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வந்தது. இதனிடையே, காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தற்போது இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி, கடந்த 7 – 8 ஆம் தேதி இரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடைமுறைக்கு வந்தது. இந்தியாவின் இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை முறியடித்து இந்தியா எதிர் தாக்குதல் தொடுத்து வருகிறது. இத்தகைய சூழலில், ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் போட்டியை ஒருவாரம் நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் அறிவித்தது. மீதமுள்ள ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த பி.சி.சி.ஐ தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. போட்டிகளை உள்நாட்டில் நடத்தலாமா? அல்லது வெளிநாட்டிற்கு எங்காவது மாற்றலாமா? என்பது போன்ற ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்தில் படிக்கவும்: ECB offers BCCI option to host IPL 2025 matches in England amidst India-Pakistan conflictஇந்த நிலையில், ஐ.பி.எல் 2025 தொடரில் மீதமுள்ள போட்டிகளை தங்களது நாட்டில் நடத்திக் கொள்ளுமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவின் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் ஐ.பி.எல் 2025 தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் பி.சி.சி.ஐ அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது ஐ.பி.எல் 2025 தொடரில் பஞ்சாப் – டெல்லி அணிகளின் போட்டி உட்பட மீதமுள்ள போட்டிகள் மற்றும் பிளேஆஃப் போட்டிகளை தங்களது நாட்டில் உள்ள மைதானத்தில் நடத்திட கேட்டுக் கொண்டார் என்று இங்கிலாந்தின் கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.செப்டம்பர் மாதத்தில் இதற்கான வாய்ப்பு திறக்கப்படலாம் என்று இங்கிலாந்து வாரிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சர்வதேச எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தின் படி, இந்தியா அப்போது ஆசியக் கோப்பையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இந்தப் போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.”சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து நிலைமையை விரிவாக மதிப்பிட்ட பிறகு, புதிய அட்டவணை மற்றும் போட்டி நடைபெறும் இடங்கள் குறித்த கூடுதல் புதுப்பிப்புகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” என்று பி.சி.சி.ஐ செயலாளர் தேவஜித் சைகியா நேற்று வெள்ளிக்கிழமை தனது அறிக்கையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.