பொழுதுபோக்கு
“போல்ட்” கண்ணனின் பல முகங்கள்; விஜய் சேதுபதி திட்டம் என்ன? “ஏஸ்” டிரெய்லர் வைரல்

“போல்ட்” கண்ணனின் பல முகங்கள்; விஜய் சேதுபதி திட்டம் என்ன? “ஏஸ்” டிரெய்லர் வைரல்
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஆறுமுககுமார் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் கொண்டிருப்பதாக டிரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது.ஆங்கிலத்தில் படிக்க: Ace trailer: Vijay Sethupathi plays a man with a plan in this crime comedy. Watchஇந்த டிரெய்லரில் ஹைலைட்டாக இருப்பது விஜய் சேதுபதியின் கண்ணன் கேரக்டர் தான். தனக்கு எப்படி “போல்ட்” என்ற பட்டப்பெயர் வந்தது என்று அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக கூறுகிறார். மலேசியாவில் ஒரு பெண்ணிடம் (திவ்யா பிள்ளை), அநீதிக்கு எதிராக தைரியமாக பேசியதால் அந்தப் பெயர் வந்ததாக கூறுகிறார். யோகி பாபுவிடம், அந்தப் பெயர் உண்மையில் “போல்ட்” அல்ல “நட்” என்றும், வாகனங்களில் இருந்து நட்டுகளை திருடும் பழக்கம் இருந்ததால் அப்படி வந்ததாகவும் சொல்கிறார்.அதேபோல், ருக்மணி வசந்த்திடம், தான் இடி மின்னலுக்கு இடையே உருவாகும் மின்சாரம் போன்றவன் என்று ரொமான்டிக்காக கூறுகிறார். இந்த மாறுபட்ட கதைகள் கண்ணன் கேரக்டரில் மர்மத்தையும், அவர் மலேசியாவுக்கு ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வந்திருக்கிறார் என்பதையும் உணர்த்துகிறது. சக்திவாய்ந்த குற்றக் குழுக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு உலகத்திற்குள் கண்ணன் நுழைந்திருப்பதையும், தனது நோக்கத்தை அடைய அவர் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதையும் முன்னோட்டத்தின் அடுத்தடுத்த காட்சிகள் காட்டுகின்றன.சுமார் 3 நிமிடங்கள் ஓடும் இந்த டிரெய்லர், ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பதாக உறுதியளிக்கிறது. விஜய் சேதுபதியுடன் இணைந்து பாப்லு பிருத்விராஜ், பி.எஸ்.அவினாஷ், முத்துகுமார், ராஜ்குமார், தினேஷ் குமார், ஆல்வின் மார்ட்டின், ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜெய், நகுலன் மற்றும் ஜஹ்ரினாரிஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கரண் பி ராவத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், பின்னணி இசையை சாம் சி.எஸ். கவனித்துள்ளார். படத்தொகுப்பை ஃபென்னி ஆலிவர் மற்றும் கலை இயக்கத்தை ஏ.கே. முத்து ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’, ‘விடுதலை பாகம் 2’ மற்றும் ‘மகாராஜா’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகுமு் முதல் திரைப்படம் இதுவாகும். மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘ட்ரெயின்’ திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.கன்னட திரையுலகில் ‘சப்த சாகரதாச்சே எல்லோ – சைடு ஏ’ மற்றும் ‘சப்த சாகரதாச்சே எல்லோ – சைடு பி’ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ருக்மணி வசந்த், ‘ஏஸ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். கடைசியாக தெலுங்கில் ‘அப்புடோ இப்படோ எப்படோ’ திரைப்படத்தில் நடித்திருந்த ருக்மணி, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘மாதராசி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். ‘ஏஸ்’ திரைப்படம் மே 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பையும், படத்தின் விறுவிறுப்பான கதையையும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.