இலங்கை
யாழ்ப்பாணத்தில் சிறுமி துஷ்பிரயோகம் – பெண்கள் உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சிறுமி துஷ்பிரயோகம் – பெண்கள் உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணம் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் எடுத்த நடவடிக்கை அடுத்து 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது-
பாதிக்கப்பட்ட சிறுமி 12 வயதில் இருந்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்தச் சிறுமி கடந்த 24ஆம் திகதி எமது அலுவலகத்துக்கு வந்து இதுதொடரபில் முறையிட்டார். எமது அலுவலகம் இது தொடர்பில் துரிதமாகச் செயற்பட்டது.
அன்றைய தினமே வடமாகண சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள ஆணையாளர் ஊடாகச் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். தொடர் நடவடிக்கைகள் ஊடாகச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் – என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அயல்வீட்டுப் பெண் ஒருவரும், மற்றொரு பெண்ணும் சிறுமியை மிரட்டி, பிற ஆண்கள் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்றும், அதற்காக அவர்கள் பணம் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் தொடர்பாகப் பொலிஸார் விசாரணகளை முன்னெடுத்துள்ளனர்.