இலங்கை
யாழ். பல்கலையில் ஒழுக்காற்று விதிமுறை மீறல் – மாணவர்கள் முறைப்பாடு

யாழ். பல்கலையில் ஒழுக்காற்று விதிமுறை மீறல் – மாணவர்கள் முறைப்பாடு
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின்போது ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு அமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறிச் செயற்படுகின்றனர் என்று பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் மூவரே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த மாதம் 29ஆம் திகதி பல்கலைக் கழக விடுதி ஒன்றுக்குள் நான்காம் வருட மாணவர் ஒருவர் குடிபோதையில் அறையொன்றில் அனுமதி பெறாது தங்கிருந்தமை தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்காது, முறைப்பாடு செய்த மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியே செல்லும் நேரம் நிறைவடைந்த பின்னர், முதலாம் ஆண்டு மாணவர்களை இரவுவேளை வீதி வழியாக வேறொரு விடுதிக்கு அழைத்துச் சென்று அறை ஒன்றில் வைத்துப் பூட்டிய பின்னர் கட்டாயப்படுத்தி பொய் வாக்குமூலங்களில் கையொப்பமிட வற்புறுத்தப்பட்டதாகவும், மாணவர்களின் சம்மதம் இன்றி காணொலி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது என்றும் மூன்று மாணவர்களும் தங்களின் முறைப்பாடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாக துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளாமல், மாணவ ஒருக்காற்று உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொள்கின்றனர் என்றும், மாணவர்களை விசாரணைக்கு அழைப்பது முதல் விசாரணை நடைமுறைகள் உட்பட சட்டத்துக்கு முரணாகச் செய்யப்படும் விசாரணைகள் பற்றி பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட போதும், முறைப்பாடு செய்யும் மாணவர்களுக்கெதிராகவே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அந்த முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.