
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 12/05/2025 | Edited on 12/05/2025

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த மாலை 5 மணிக்கு இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
முப்படையை சேர்ந்த அதிகாரிகளும் நேற்றும் இன்றும் செய்தியாளர்களைச் சந்தித்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விளக்கங்களை அளித்திருந்தனர். ‘பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களை தாக்கும் நோக்கத்தோடு ‘ஆபரேஷன் சிந்தூர்’ வடிவமைக்கப்பட்டது. தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.நமது நாட்டைச் சேர்ந்த ஐந்து ராணுவ வீரர்களும் பொதுமக்களும் தங்களது இன்னுயிரை தந்துள்ளனர். எங்கள் சண்டை பாகிஸ்தான் ராணுவத்துடன் இல்லை பயங்கரவாதிகளுடன் மட்டுமே’ என விளக்கம் கொடுத்திருந்தனர்.
போர் சூழல் தணிந்து வரும் நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘அமெரிக்க தான் இந்த போரை நிறுத்தியது’ என பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ”இந்தியா-பாகிஸ்தான இடையில் போர் நிறுத்தம் நிரந்தரமாகவே இருக்கும் என நம்புகிறேன். அமெரிக்காவால் இந்திய-பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுத மோதலை அமெரிக்கா நிறுத்தியது. போரை நிறுத்தப்பட்டால் வணிகம் செய்ய மாட்டேன் என நான் கூறியதை அடுத்து இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. வணிகத்தை என்னைப்போல் யாரும் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். சண்டை நிறுத்தும் ஒன்றே நிரந்தர தீர்வு” என பேசி உள்ளார்.
மோடி இன்னும் சிறிது நேரத்தில் நாட்டு மக்களுக்காக உரையாற்ற உள்ள நிலையில் டிரம்ப் இப்படி பேசியுள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது.
- “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
- “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்