இந்தியா
ஆப்ரேஷன் சிந்தூர்: ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் முதன்முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றும் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர்: ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் முதன்முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றும் மோடி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துவதற்கான உடன்பாட்டை எட்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தளங்களை குறிவைத்து இந்தியா ‘ஆப்ரேஷ சிந்தூர்’ நடவடிக்கையை தொடங்கியதிலிருந்து பிரதமர் மோடியின் முதல் பொது உரை இதுவாகும். இன்று மாலை 5 மணிக்கு இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை இயக்குநர்கள் பேச்சுவார்த்தை நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு மோடியின் உரை வெளியாக இருக்கிறது.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் பல உயர்மட்ட கூட்டங்களை பிரதமர் நடத்தினார். மேலும் இந்திய ஆயுதப் படைகளிடம், “அங்கிருந்து தோட்டாக்கள் சுடப்பட்டால், நாங்கள் குண்டுகளால் பதிலளிப்போம்” என்று கூறியதாகத் தெரிகிறது.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்திய மற்றும் 1 நேபாள குடிமக்கள் கொல்லப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு நடந்த தீவிரவாத தாக்குதலில், அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டது இதுவாகும்.இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா, இஸ்லாமாபாத்திற்கு எதிராக பல ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தது. பாகிஸ்தான் குடிமக்களின் இந்திய விசாக்களை ரத்து செய்தல் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல் ஆகியவை முதல் கட்ட நடவடிக்கைகளில் அடங்கும்.பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி மற்றும் கப்பல்கள் நிறுத்துதல், அனைத்து அஞ்சல் மற்றும் பார்சல்கள் பரிமாற்றத்தை நிறுத்துதல், பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களுக்கு இந்திய வான்வெளியை மூடுதல் மற்றும் பக்லிஹார் அணை வழியாக நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவையும் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் அடங்கும்.பின்னர், பதற்றம் அதிகரித்த நிலையில், மே 7 ஆம் தேதி 244 சிவில் பாதுகாப்பு மாவட்டங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த இந்தியா அறிவித்தது. ஆனால் மே 6 மற்றும் 7 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் 9 தீவிரவாத தளங்களை தாக்கியது. இந்திய மண்ணில் பல தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமான பல தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்களை அழித்தது. இந்த உரையில் பிரதமர் மோடி, ‘சிந்தூர்’ நடவடிக்கையின் விளைவுகள் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த உடன்பாடு குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.