இந்தியா
ராணுவ நடவடிக்கை குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் குறித்து எந்த விவாதமும் இல்லை – வெளியுறவு அமைச்சகம்

ராணுவ நடவடிக்கை குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் குறித்து எந்த விவாதமும் இல்லை – வெளியுறவு அமைச்சகம்
வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய ஒரு நாள் கழித்து, வெளியுறவு அமைச்சகம், இராணுவ நடவடிக்கை குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் வர்த்தகம் குறித்து எந்த விவாதமும் இல்லை என்று தெளிவுபடுத்தியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியாக தீர்க்க வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதனையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. பின்னர் இரு நாடுகளும் ராணுவ மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதையடுத்து எல்லைப் பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறது.இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வர்த்தகத்தை நிறுத்துவதாகக் கூறி மிரட்டி, இந்தியா மற்றும் பாகிஸ்தானை போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கச் செய்தேன் என்று திங்கட்கிழமை தெரிவித்தார்.இந்தநிலையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அதில் டிரம்ப் கூறிய கருத்துக்களை மறுத்தார். வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அளித்த விளக்கத்தின் முக்கிய அம்சங்கள் இங்கே“26/11 தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது…. பாகிஸ்தான் நிறுத்தினால், இந்தியா நிறுத்தும். இப்போது ஒரு புதிய இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது, பாகிஸ்தான் அதை விரைவில் பெறுகிறதோ, அவ்வளவு சிறந்தது” என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், காஷ்மீர் குறித்த இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்புப் பிரச்சினை என்றும், இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறினார்.“ஜம்மு காஷ்மீர் இந்திய யூனியன் பிரதேசம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியாகவே தீர்க்க வேண்டும் என்பது நமது நீண்டகால தேசிய நிலைப்பாடு,” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.“அந்தக் கொள்கை மாறவில்லை. உங்களுக்குத் தெரியும், நிலுவையில் உள்ள விஷயம் என்னவென்றால், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதியை விட்டுக்கொடுப்பதுதான்,” என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். இவ்வாறு டிரம்பின் சலுகை குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். அணு ஆயுதப் போர் குறித்த டிரம்பின் ஊகங்கள் குறித்து, இராணுவ நடவடிக்கை முற்றிலும் வழக்கமான களத்தில் இருப்பதாக ஜெய்ஸ்வால் கூறினார்.“பாகிஸ்தானின் தேசிய ராணுவ ஆணையம் மே 10 அன்று சந்திக்கும் என்று சில தகவல்கள் வந்தன. ஆனால் இதை பின்னர் அவர்களே மறுத்தனர். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரே அணு ஆயுதக் கோணத்தை மறுத்துள்ளார்,” என்று ஜெய்ஸ்வால் கூறினார்.”உங்களுக்குத் தெரியும், இந்தியா அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியவோ அல்லது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதன் மூலம் நடத்த அனுமதிக்கவோ கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது,” என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.”பல்வேறு நாடுகளுடனான உரையாடல்களில், இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு அவர்கள் துணைபோவது அவர்களின் சொந்த பிராந்தியத்தில் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் நாங்கள் எச்சரித்தோம்,” என்று ஜெய்ஸ்வால் கூறினார்.பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும், மீளமுடியாத வகையிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை கைவிடும் வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைக்கும் என்று ஜெய்ஸ்வால் கூறினார்.பாகிஸ்தான் தொழில்துறை அளவில் பயங்கரவாதத்தை வளர்த்தது என்று ஜெய்ஸ்வால் கூறினார்.ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா அழித்த பயங்கரவாத தளங்கள், இந்தியர்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பல அப்பாவிகளின் மரணத்திற்கும் காரணமான தளங்களாகும் என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.கூடுதல் தகவல்கள்: பி.டி.ஐ