
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 14/05/2025 | Edited on 14/05/2025

பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆமிர் கான் தயாரித்துள்ள ‘லாகூர் 1947’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. ஜூனில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சினிமாவை தவிர்த்து ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளராகவும் ப்ரீத்தி ஜிந்தா இருந்து வருகிறார். இந்தாண்டு ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி மூன்றாவது இடத்தில் இப்போது இருக்கிறது. லீக் சுற்று நடந்து வந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்ற சூழ்நிலை காரணமாக மீதமுள்ள 17 போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் போர் தற்போது நிறுத்தப்பட்டதால் வருகிற 17ஆம் தேதி முதல் மீண்டும் போட்டிகள் தொடங்குகிறது.
இந்த சூழலில் ப்ரீத்தி ஜிந்தா, எக்ஸ் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் சிறிது நேரம் உரையாடியிருந்தார். அப்போது ஒரு ரசிகர், பஞ்சாப் அணியில் இருக்கும் மேக்ஸ் வெல் வீரரை குறிப்பிட்டு, உங்கள் அணிக்காக மேக்ஸ் வெல் நன்றாக விளையாடாததற்குக் காரணம் உங்களை திருமணம் செய்து கொள்ளாததினாலா? எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ப்ரீத்தி ஜிந்தா, “இந்தக் கேள்வியை எல்லா அணிகளில் உள்ள ஆண் உரிமையாளர்களிடமும் கேட்பீர்களா, அல்லது பெண்களுக்கு மட்டும்தான் இந்த பாகுபாடு இருக்கிறதா?
நான் கிரிக்கெட்டுக்குள் நுழையும் வரை, பெண்கள் கார்ப்பரேட் அமைப்புகளில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் நகைச்சுவைக்காக இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் நீங்கள் உண்மையில் அந்த கேள்வியின் மூலம் என்ன சொல்ல முயல்கிறீர்களோ அது அழகான ஒன்று அல்ல. கடந்த 18 ஆண்டுகளாக நான் மிகவும் கடினமாக உழைத்து ஒரு மரியாதையை பெற்றுள்ளேன். எனவே தயவுசெய்து எனக்கான மரியாதையை கொடுங்கள். பாலின பாகுபாட்டுடன் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என பதிலளித்துள்ளார்.