இலங்கை
கொழும்பு மாநகரத்தை கைப்பற்றியே தீருவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுதி!

கொழும்பு மாநகரத்தை கைப்பற்றியே தீருவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுதி!
கொழும்பு மாநகரசபையில் அரசாங்கத்தை ஆட்சியமைக்க விடப்போவதில்லை. அந்தச் சபையை நாங்கள் கைப்பற்றியே தீருவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
தனித்து ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத சபைகளில் அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருக்கக்கூடாதென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கும்போது, செயற்படக்கூடிய சட்டம் ஒன்று இருக்கிறது. அதனால் அரசாங்கம் தங்களுக்கு பெரும்பான்மை இல்லாத சபைகளுக்கு பெரும்பான்மையை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பதற்கு முன்னர் அது தொடர்பான சட்டத்தை முறையாக வாசித்துப் பார்க்க வேண்டும்.
தேர்தலில் எந்தவொரு கட்சியும் அந்த பிரதேச உள்ளூராட்சி சபையில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனால், அந்த சபைகளின் தலைவர் அல்லது மேயரை வாக்களிப்பின் மூலமே தெரிவுசெய்ய வேண்டும். இதுவே அரசமைப்பால் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையாக உள்ள நிலையில், ரில்வினின் கருத்துக்களை நாங்கள் கணக்கெடுக்கப்போவதில்லை.
கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு பல கட்சிகள் ஆதரவை வழங்க முன்வந்துள்ளன. பேச்சுவார்த்தைகள் 90 வீதம் வெற்றிபெற்றுள்ளன. கொழும்பு மாநகரசபையை அரசாங்கம் கைப்பற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை – என்றார்.