இலங்கை
இனப்படுகொலை தொடர்பில் கனடாவின் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை!

இனப்படுகொலை தொடர்பில் கனடாவின் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை!
அரசோடு ஒத்தூதுகின்றார் அலி சப்ரி
இலங்கை இராணுவம் ஒருபோதும் இனப்படுகொலையில் ஈடுபடவில்லை. எனவே, இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கனடாவில் இருந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்பதுடன் கண்டிக்கத் தக்கவையுமாகும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையின் ஒற்றுமை, கௌரவம் மற்றும் நல்லிணக்கத்துக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கனடாவின் ஒன்றாரியோவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்.
ஒன்றாரியோவில் (ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் நகரில்) தமிழர் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டுள்ளமையை முன்னிட்டும், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகத் தொடர்பில் பரப்புரை செய்யும் வாரத்தைக் கடைப்பிடிக்கின்றமையை முன்னிட்டும் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன்.
இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என்பதை நான் ஆழமாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றேன். எனவே, இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் இங்கு (இலங்கையில்) மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்தான் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டது. அது ஒருபோதும் எந்தவொரு மக்கள் கூட்டத்தையும் இலக்குவைத்த போராகாது – என்றுள்ளது.