இந்தியா
சாக்லேட், பானிபூரி கேட்டு போனில் தொல்லை: சிவகங்கை சிறுவனின் வீட்டுக்கு நேரில் சென்று எச்சரித்த புதுச்சேரி போலீஸ்

சாக்லேட், பானிபூரி கேட்டு போனில் தொல்லை: சிவகங்கை சிறுவனின் வீட்டுக்கு நேரில் சென்று எச்சரித்த புதுச்சேரி போலீஸ்
கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்ணை (1930) தொடர்பு கொண்டு யாரோ ஒரு நபர் பானி பூரி வேண்டும் என்றும், சாக்லேட் வேண்டும் என்றும் போன் செய்து தொந்தரவு செய்து கொண்டே இருந்துள்ளார். அந்த நபரை கண்டுபிடிக்க புதுச்சேரி இணையவழி போலீசார் முடிவு செய்த நிலையில், இன்று காலை மேற்படி தொந்தரவு செய்து எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அந்த எண் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, போலீசார் முகவரியை வைத்து இருப்பிடத்தை கண்டுபிடித்து வீட்டில் இருப்பவர்களை விசாரித்த போது அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. இணைய வழி காவல் நிலையத்திற்கு போன் செய்து பானிபூரி மற்றும் சாக்லேட்டை கேட்டது ஏழு வயது சிறுவன் என்பது தெரிய வந்ததுபள்ளி விடுமுறையால் தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தன்னுடைய உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் அடிக்கடி தன் அம்மாவிற்கு செல் போனில் தொடர்பு கொண்ட போது மேற்படி விழிப்புணர்வு விளம்பரத்தை கேட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, இணைய வழி காவல் நிலைய கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் ஆய்வாளர்கள் தியாகராஜன் கீர்த்தி மற்றும் இணைய வழி காவலர்கள் கார்த்திகேயன் சதீஷ் மேற்படி வீட்டிற்குச் சென்று சிறுவனிடம் சிறிது நேரம் பேசியுள்ளனர். அப்போது சிறுவனிடம் எப்படி1930 என்ற எண் குறித்து தெரியும் என்று கேட்டுள்ளனர். அந்த சிறுவன், “எங்க அம்மாவிற்கு ஃபோன் செய்யும் போது அடிக்கடி 1930-வை தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்” என்றுகூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகமும் தொலைதொடர்புத் துறையும் இணைந்து பொதுமக்கள் இணையவழி மோசடிகளில் சிக்காமல் இருக்க பல்வேறு வழிமுறைகளை கூறி இணைய வழி சம்பந்தமாக அவசர உதவி ஏதேனும் இருந்தால் 1930 என்ற எண்ணிற்கு அழையுங்கள் என்று காலர் டியூனாக வருகிறது. இந்த தகவலை தவறாக புரிந்து கொண்ட ஏழு வயது சிறுவன் இணைய வழி காவல் நிலையத்திற்கு போன் செய்து பானிபூரி சாக்லேட் கேட்டது தெரியவந்துள்ளது.தொடர்ந்து, “குழந்தையின் பெற்றோர்களிடம் குழந்தைகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் எட்டுக்கும் மேற்பட்ட முறை இணைய வழி காவல் நிலையத்திற்கு குழந்தை போன் செய்து இருக்கிறான். இதுபோன்ற தொந்தரவு இனி நடந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாள் ஒன்றுக்கு 50க்கும் மேற்பட்ட அழைப்புகள் இந்த எண்ணிற்கு வருகிறது” என்றும் தெரிவித்து எச்சரிக்கை செய்துவிட்டு வந்தனர். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.