
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 16/05/2025 | Edited on 16/05/2025

அஜித்குமார் கடைசியாக அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்று ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த வெற்றியின் காரணமாக அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவரது கலை சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியது.
இதனிடையே கார் ரேஸில் தற்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஜனவரி முதல் பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் பந்தய போட்டிகளில் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது அணி பெயரில் பங்கேற்றுவருகிறார். அதில் சில போட்டிகளில் வெற்றியும் கண்டுள்ளார். இன்னும் சில போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில் அஜித், தான் நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்றை பிரபல ஆங்கில இதழ் பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “அடுத்த 6 ஆண்டுகளுக்கு எனது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் எனக்கு கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் நல்ல திரைப்படங்கள் வெளியாகுவதை நீங்கள் பார்ப்பீர்கள். எனது அடுத்த படத்தை இந்தாண்டு நவம்பரில் தொடங்கவிருக்கிறேன். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என நம்புகிறேன்” என்றுள்ளார்.