இந்தியா
ஒட்டுமொத்த ராணுவமும், வீரர்களும் மோடியின் பாதங்களை தலைவணங்குகிறார்கள்: சர்ச்சையை கிளப்பும் ம.பி துணை முதல்வர் பேச்சு

ஒட்டுமொத்த ராணுவமும், வீரர்களும் மோடியின் பாதங்களை தலைவணங்குகிறார்கள்: சர்ச்சையை கிளப்பும் ம.பி துணை முதல்வர் பேச்சு
கர்னல் சோஃபியா குரேஷியை “பயங்கரவாதிகளின் சகோதரி” என்று குறிப்பிட்டு மத்திய பிரதேச அமைச்சர் ஒருவர் பா.ஜ.க-வை சிக்கலில் ஆழ்த்திய சில நாட்களுக்குப் பிறகு, பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து இந்திய ராணுவத்தினர் வணங்குவதாகக் கூறி, அம்மாநிலத்தின் துணை முதல்வர் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஜபல்பூரில் இன்று (மே16) நடந்த சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கான பயிற்சி அமர்வில் துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்ரா பேசினார். அப்போது, “பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம். முழு தேசமும், தேசத்தின் ராணுவம், அதன் வீரர்கள் ஆகியோர் பிரதமரின் பாதங்களில் தலைவணங்குகிறார்கள். அவர் அளித்த பதிலடிக்கு முழு தேசமும் அவரது பாதங்களில் தலைவணங்குகிறது” என்று கூறினார்.இந்தக் கருத்து கடும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில், “காங்கிரஸ், இதை தவறான முறையில் முன்வைக்கிறது. எனது அறிக்கை மாற்றப்பட்டு தவறான முறையில் எடுத்துரைக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.”ஆப்ரேஷன் சிந்தூரில், நாட்டின் ராணுவம் மகத்தான பணியைச் செய்துள்ளது என்றும், நாட்டின் மக்கள் இந்திய ராணுவத்திற்கு தலைவணங்குகிறார்கள் என்றும் நான் கூறினேன். சதி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘தேசத்தின் மக்கள் பாரத ராணுவத்தின் பாதங்களில் தலைவணங்குகிறார்கள்’ என்று நான் கூறினேன். ஏனெனில் அவர்கள் நம்மையும் நாட்டையும் பாதுகாக்கிறார்கள். காங்கிரஸ் மனவேதனையில் இருந்து பேசுகிறது; அவர்கள் தங்கள் நிலையை அறிய கண்ணாடியில் பார்க்க வேண்டும்” என்று அவர் கூறினார்.காங்கிரஸ் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, “பா.ஜ.க தலைவர்கள் நமது ராணுவத்தை தொடர்ந்து அவமதிப்பது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது” என்று கூறினார்.”முதலில், மத்திய பிரதேச அமைச்சர் பெண் ராணுவ வீரர்கள் மீது அநாகரீகமான கருத்தை தெரிவித்தார். இப்போது அவர்களின் துணை முதல்வர் ராணுவத்தை கடுமையாக அவமதித்துள்ளார். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ராணுவத்தின் வீரத்தை நினைத்து பெருமைப்படுகிறார்கள். ஆனால் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் ராணுவத்தை அவமதிக்கிறார்கள். இந்த தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பா.ஜ.க அவர்களை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் செய்கிறது” என்று பிரியங்கா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.பழங்குடியினர் துறை அமைச்சர் விஜய் ஷாவின் கர்னல் குரேஷி குறித்த கருத்துகளுக்கு எதிராக பல மூத்த தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கார் உட்பட பல மூத்த தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.தேவ்ராவின் கருத்துகளுக்காகவும் காங்கிரஸ் மீண்டும் போராட்டம் நடத்தும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி அறிவித்தார். “மோகன் யாதவ் அரசாங்கத்தின் அமைச்சர் விஜய் ஷா ராணுவத்தின் வீர கர்னலை பயங்கரவாதிகளின் சகோதரி என்று அழைக்கிறார். துணை முதல்வர், ராணுவம் மோடியின் காலில் வணங்குவதாக கூறுகிறார். ஊடகங்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பும்போது, அவர் அர்த்தமற்ற வகையில் கோபமாக பதிலளிக்கிறார். இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பா.ஜ.க அவர்களை பாதுகாக்கிறது” என்று அவர் கூறினார்.பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஆஷிஷ் அகர்வால் கூறுகையில், “காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் ராணுவம் மீது மரியாதை இல்லை… தேவ்ரா முற்றிலும் சரியாகக் கூறியுள்ளார் – ஒட்டுமொத்த நாடும், நாட்டின் ராணுவமும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த வீரர்களின் கால்களில் தலைவணங்குகிறது” என்றார்.டெல்லியில் பேசிய காங்கிரஸ் சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் தளங்களின் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத், “பிரதமர் மோடி உடனடியாக துணை முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அவர் அவ்வாறு செய்யத் தவறினால், இது அவரது அனுமதியுடன் கூறப்பட்டது மற்றும் அவரது ஆதரவைக் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்ப வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்” என்றார்.