
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 16/05/2025 | Edited on 16/05/2025

ராட்சசன் பட பாணியில் மர்டர் மிஸ்ட்ரி திரைப்படங்களுக்கு இன்றைய தமிழ் சினிமாவில் மிகப் பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. எவ்வளவு பெரிய நாயகர்களின் படங்கள் வந்து திரையரங்குகளை ஆக்கிரமித்து சென்றாலும் சில இடங்களில் வெளியாகும் சிறப்பான திரில்லிங்கான மர்டர் ஹிஸ்டரி திரைப்படங்கள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அதுவாகவே தானாக திரையரங்குகளை அதிகப்படுத்திக் கொண்டு மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டி இருக்கிறது. அந்த மாதிரியான படங்களை தமிழ் சினிமாவில் அவ்வப்போது காண முடிந்தாலும் சில காலங்களாக அவை சற்று மிஸ் ஆகி கொண்டு இருந்தன. தற்பொழுது அதை பூர்த்தி செய்யும் வகையில் வெளியாகி இருக்கும் இந்த லெவன் திரைப்படம் ரசிகர்களுக்கு எந்த அளவு பரவசத்தை கொடுத்திருக்கிறது?
ஒரே நேரத்தில் போதை மாத்திரை கடத்தல் கும்பலையும் வங்கியில் கொள்ளை அடிக்கும் கும்பலையும் துப்புத் துலக்கி அவர்களை கண்டுபிடித்து உள்ளே தள்ளுகிறார் ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி நவீன் சந்திரா. இதற்கிடையே நகரத்தில் மர்மமான முறையில் அவ்வப்போது கொலைகள் நடந்து வருகின்றன. இந்த அனைத்து கொலைகளுமே ஒரே பேட்டனில் அனைவரும் நெருப்பில் எரிக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். போலீஸ் தரப்பில் தடயங்கள் கிடைக்காமல் யார் செய்தது என தலையைப் பியித்துக் கொள்ளும் சமயத்தில் இந்த வழக்கை துப்பு துலக்க நவீன் சந்திராவிடம் போலீஸ் கமிஷனர் ஆடுகளம் நரேன் கேஸை ஒப்படைக்கிறார். நவீன் சந்திராவும் புலனாய்வு செய்ய ஆரம்பிக்கிறார். இந்த அனைத்து கொலைகளுக்கும் ஒரே தொடர்பு அனைவரும் அவரவர் பிறந்த நாளில் கொல்லப்படுகின்றனர் என்பதுதான். அதேபோல் அவர்கள் அனைவரும் இரட்டையர்களாக இருக்கிறார்கள். அது ஏன்? கொலையாளி யார்? நாயகன் ஐபிஎஸ் அதிகாரி நவீன் சந்திரா கொலையாளியை கண்டுபிடித்தாரா, இல்லையா? இந்த கொலைகளுக்கான காரணம் என்ன? என்பதே இந்த லெவன் படத்தின் மீதி கதை…
ஒரு மர்டர் மிஸ்டரி த்ரில்லர் படங்களுக்கு எந்த மாதிரியான திரைக்கதை வேண்டுமோ அந்த மாதிரியான திரைக்கதையை மிக மிக சிறப்பாக கொடுத்து அதே போல் ஒரு சூப்பர் ஹிட் த்ரில்லர் படத்திற்கு எந்த மாதிரியான திருப்புமுனைகள் தேவையோ அதை நேர்த்தியாக திரைக்கதைக்குள் உட்பகுத்தி ரசிகர்களை சீட் நுணிக்கு வரவைத்து கைதட்டல் பெற்று இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் அஜிலிஷ். படம் ஆரம்பித்தது முதல் எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் காட்சிகளுக்கு காட்சி பல்வேறு டுவிஸ்டுகள் வைத்து படம் முடியும் வரை எந்த ஒரு இடத்திலும் தடம் புரளாமல் கதைக்கு என்ன தேவையோ அந்த காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு பார்ப்பவர்களுக்கும் ஒரு கிரிப்பிங் த்ரில்லர் படம் பார்த்த உணர்வை இயக்குநர் கொடுத்து இருக்கிறார்.
இது போன்ற ஜானர் உள்ள படங்களுக்கு ஒரு கொலை அந்த கொலைக்கான காரணம் அந்த கொலையை மற்றும் கொலையாளியை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதே பிரதான கதையாக இருக்கும். ஆனால் அது எந்த அளவு மற்ற படங்களைக் காட்டிலும் வித்தியாசமாக அமைகிறது என்பதை பொறுத்துத்தான் அந்தந்த படங்கள் வெற்றி பெறுகின்றன. அந்த வரிசையில் இந்த படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை வைத்துக்கொண்டு அதை சிறப்பாக கையாண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு சிறப்பான மர்டர் மிஸ்டரி த்ரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் படத்தில் ஏற்படும் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து பரவசப்படுத்தி இருக்கிறது. படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் சற்றே அயற்சியான காட்சி அமைப்புகள் இருந்தாலும் அவையெல்லாம் சிறப்பான திரைக்கதை மூலம் மறக்கடிக்கப்பட செய்து படத்தையும் கரை சேர்க்க உதவியிருக்கிறது.
படத்தின் நாயகன் நவீன் சந்திரா இருக்கமான முகத்துடனே படம் முழுவதும் வருகிறார். மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வரும் அவர் எந்த ஒரு இடத்திலும் குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் அங்கும் இங்கும் கவனத்தை சிதறாமல் தனக்கு கொடுத்த வேலையை மட்டுமே பிரதானமான வேலையாக நினைத்து அதையே படம் முழுவதும் செய்து கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்திருக்கிறார். தேவையில்லாத டிஸ்ட்ராக்ஷன்ஸ்களை விட்டு விட்டு கதாபாத்திரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து கவனம் பெற்று இருக்கிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பிறகு இவருக்கு இந்த படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை அபிராமி அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை கொடுத்து சிறப்பு செய்திருக்கிறார். மற்றொரு போலீஸ் அதிகாரியாக வரும் திலீபன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
சில காட்சிகளே வந்தாலும் ஆடுகளம் நரேன் மனதில் பதிகிறார். ரித்விகா, அர்ஜை, ரியா ஹரி, சஷான்க், ரவி வர்மா, கீர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் வந்து அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்று இருக்கின்றனர். குறிப்பாக அந்த இரட்டையர்களாக நடித்த இரண்டு சிறுவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். படத்தின் நாயகியாக வரும் தயாரிப்பாளர் தனக்கு என்ன வருமோ அதை செய்துவிட்டு சென்றிருக்கிறார்.
டி. இமான் இசையில் பாடலை காட்டிலும் பின்னணி இசை அபாரமாக இருக்கிறது. ஒரு த்ரில்லர் படத்திற்கு எந்த மாதிரியான இசை தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறார். கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் மற்றும் பிளாஷ் பேக் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திற்கு உயிர் ஜீவனாக அமைந்திருக்கிறது. அதேபோல ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பு. ஒரு ப்ராப்பர் இன்வெஸ்டிகேடிவ் மர்டர் மிஸ்டரி த்ரில்லர் படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி ஒரு படமாக இந்த லெவன் திரைப்படம் அமைந்திருக்கிறது. நல்ல வெற்றி பெற்ற த்ரில்லர் படங்கள் வரிசையிலும் இந்த திரைப்படம் இணையும்.
லெவன் – சிறப்பு!