பொழுதுபோக்கு
நீங்கள் இப்படி செய்தால் என் ரசிகராக இருக்க தகுதியே இல்லை; ரசிகர்களை கண்டித்த நடிகர் சூரி: காரணம் என்ன?

நீங்கள் இப்படி செய்தால் என் ரசிகராக இருக்க தகுதியே இல்லை; ரசிகர்களை கண்டித்த நடிகர் சூரி: காரணம் என்ன?
காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக மாறியுள்ள சூரி நடிப்பில், மாமன் திரைப்படம் இன்று (மே 16) வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டது குறித்து சூரி வருத்தம் தெரிவித்துள்ளார்.சிறிய கேரக்டரில் பல படங்களில் நடித்து, வென்னிலா கபடிக்குழு படத்தின் மூலம், கவனிக்கப்படும் காமெடி நடிகராக மாறிய சூரி, வெற்றிமாறனின், விடுதலை படத்தின் மூலம், ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு இவர் நடித்த, கருடன், விடுதலை 2 ஆகிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஹீரோவாக தனது 4-வது படமான மாமன் படத்தில் சூரி நடித்துள்ளார். விலங்கு வெப் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, ராஜ்கிரண், சுவாசிகா, பாலா சரவணன் மற்றும் பாபா பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (மே 16) திரையரங்குகளில் வெளியான மாமன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் சூரியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், படத்தின் வெற்றி குறித்து நடிகர் சூரி செய்தியாளர்களிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.அதே சமயம் மாமன் படத்தின் வெளியீட்டை ஒட்டி நடந்த ஒரு சம்பவம் அவரை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மதுரையில் சிலர் ‘மாமன்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாக பரவியது. இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் சூரி, “அவர்களை நான் எப்படி என் அன்பான சகோதரர்கள் என்று சொல்வது என்று தெரியவில்லை. அவர்களின் செயல் மிகவும் முட்டாள்தனமானது.அவர்கள் படத்திற்காக இப்படி செய்ததை நினைத்து என் இதயம் நொறுங்கிவிட்டது. படத்தின் கதை நன்றாக இருந்தால் அது வெற்றி பெறும். அதற்காக ஒருவர் மண்ணை சாப்பிட வேண்டியதில்லை. நீங்கள் என்னை கவர்வதற்காக இப்படி செய்தீர்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் இதை முழுமையாக கண்டிக்கிறேன். இந்த முயற்சியையும் பணத்தையும் ஏழைகளுக்கு உணவு கொடுக்கவோ அல்லது தண்ணீர் தேவைப்படுபவர்களுக்கு செய்திருக்கலாம். நீங்கள் மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், நீங்கள் என் ரசிகனாக இருக்க தகுதியற்றவர்கள்” என்று மிகவும் கண்டிப்பாக கூறியுள்ளார்.மாமன் படம் குறித்து பேசிய சூரி,”திரைப்படம் இப்போது பெற்று வரும் வரவேற்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பல சகோதரிகள் இந்த படம் அவர்களின் வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் என்று என்னிடம் வந்து சொன்னார்கள். நாங்கள் சொல்ல விரும்பியதும் அதுதான், குடும்ப பார்வையாளர்களுடன் படம் தொடர்பு கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதுபோன்ற ஒரு படத்தில் நான் எப்போதும் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன், எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.