இலங்கை
பல இலட்சம் அரச பணத்தில் மகிந்தவுக்கு விளம்பரம் ; சிக்கிய பெரும் தலைகள்

பல இலட்சம் அரச பணத்தில் மகிந்தவுக்கு விளம்பரம் ; சிக்கிய பெரும் தலைகள்
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவர் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளது.
2014ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி நிறைவு ஆண்டு விழாவை முன்னிட்டு, இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம் அரசாங்கத்துக்கு 17 இலட்சம் ரூபாவுக்கும் மேல் நட்டம் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோர் மீது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
2014 நவம்பர் 19 அன்று, மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி நிறைவு விழாவை முன்னிட்டு, 11 செய்தித்தாள்களில் இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி விளம்பர இணைப்புகள் வெளியிடப்பட்டதன் மூலம், 1,748,877.76 ரூபா அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தப்பட்டதாகவும், இது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் எனவும் குற்றம்சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக மொத்தம் ஐந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
15 சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், 21 ஆவணங்கள் வழக்கு ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.