
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 16/05/2025 | Edited on 16/05/2025

சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1, 2 படங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இதன் மூன்றாவது பாகமான டிடி ரிட்டன்ஸ் திரைப்படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற்றுது. இதன் தொடர்ச்சியாக தற்போது தில்லுக்கு துட்டு படத்தின் நான்காம் பாகமாக பார்க்கப்படும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ ரிலீஸாகி இருக்கிறது. முந்தைய படங்கள் கொடுத்த வெற்றியை இந்த திரைப்படமும் கொடுத்ததா, இல்லையா?
யூடியூப்பில் சினிமா விமர்சகராக இருக்கும் சந்தானம், படங்களை கண்டமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். இதைப் பிடிக்காத பேயாக வரும் இயக்குநர் செல்வராகவன் சந்தானத்தை ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க அழைக்கிறார். அந்த திரையரங்குக்கு சந்தானம் தன் குடும்பத்துடன் சென்று படம் பார்க்க செல்கிறார். போன இடத்தில் இவர்கள் மொத்த குடும்பமும் அந்த படத்திற்குள் சென்று விடுகின்றனர். அந்தப் படத்திற்குள் ஒரு சைக்கோ கில்லர் மற்றும் ஒரு பேய் மற்றும் நர மாமிசம் தின்னும் கேணிபல்ஸ் இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து அந்தப் படத்தை விட்டு இவர்கள் வெளியே தப்பித்து வர வேண்டும் என்றால், அந்த படம் முடியும் வரை இவர்கள் அனைவரும் உயிரோடு இருந்தாக வேண்டும் என அந்த செல்வராகன் பேய் கட்டளையிடுகிறது. இதையடுத்து இதை எடுத்து அந்தப் படத்துக்குள் மாட்டிக்கொண்ட சந்தானம் அண்ட் கோ உயிரோடு வெளியே தப்பித்து வந்தார்களா, இல்லையா? என்பதே இந்த படத்தின் மீதி கதை.
இப்படி ஒரு வித்தியாசமான கதையை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்றார் போல் மிகவும் ஸ்மார்ட்டான திரைக்கதை அமைத்து எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் மிகவும் விறுவிறுப்பான ஒரு படமாக இந்த பேய் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரேம் ஆனந்த். பொதுவாக இந்த டிடி படங்களில் காமெடி காட்சிகள் பெரிதாக பேசப்படும். ஆனால் இந்த படத்தில் காமெடி காட்சிகளை தாண்டி படத்தின் மேக்கிங் மற்றும் திரைக்கதை வேகம் ஆகியவை பிரதானமாக தெரிகிறது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் மிகவும் வேகமாக விறுவிறுப்பாகவும் சென்று காட்சிக்கு காட்சி டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைத்து பார்ப்பவர்களுக்கு பரவசத்தை கொடுத்திருக்கிறது. அதேசமயம் சந்தானத்துக்கே உண்டான கலகலப்பான காட்சிகளும் படத்தில் ஆங்காங்கே இருக்கிறது. அவையும் ரசிக்குப்படி இருக்கிறது.
பஞ்ச் காமெடிகள், வசன காமெடிகள் பெரிதாக இந்த படத்தில் இல்லாமல் ஸ்லாப்ஸ்டிக் காமெடியை பிரதானமாக இந்த படத்தில் பயன்படுத்தி சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மொழி ரசிகர்களையும் ரசிக்க வைத்து ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார். படத்தின் இறுதி காட்சிகள் சற்றே நீளமான காட்சிகளாக இருப்பதும், இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளின் நீளமும் சற்றே குறைத்து இருக்கலாம். ஆனால் இது எதுவும் படத்தை பெரிதாக பாதிக்காமல் இருப்பது இந்த படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தையும் வெற்றி பெற செய்து இருக்கிறது. வழக்கமான சந்தானமாக இல்லாமல் இந்த படத்தில் ‘கிஸா 47’ என்ற ஒரு கதாபாத்திரத்தில் இந்த கால புள்ளிங்கோ இளைஞர்களை ஞாபகப்படுத்தும் நபராக வருகிறார். ப்ரோ, ப்ரோ என இவர் பேசும் வசன அமைப்புகள் பல இடங்களில் புதிதாக இருந்தாலும் போகப் போக அது நமக்கே பழகி விடுகிறது. படத்தின் ஆரம்ப முதல் இறுதி வரை ஓடிக்கொண்டே இருக்கிறார், கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார்.
சந்தானத்துடன் படம் முழுவதும் வரும் மொட்டை ராஜேந்திரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல காமெடி ரோலில் நடித்து சிரிப்பு வர வைத்திருக்கிறார். இவருக்கும் சந்தானத்துக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. படத்தின் இன்னொரு சர்ப்ரைஸ் எலிமெண்டாக நிழல்கள் ரவி, காமெடி காட்சிகளில் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார். அதேபோல் கௌதம் வாசுதேவ் மேனனும் படம் முழுவதும் ஸ்ட்ரிக்ட் ஆபீசராக வருகிறார். அது பார்ப்பவர்களுக்கு நல்ல காமெடியாக இருக்கிறது. மற்றபடி உடன் நடித்த யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, மாறன், கிங்ஸ்லி உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து காமெடி காட்சிகளை எலிவேட் செய்து சிரிக்க வைத்திருக்கின்றனர். நாயகி கீத்திகா திவாரி ஆரம்பத்தில் சில காட்சிகளே வந்து பிற்பகுதியில் பேயாக மிரட்டி அதற்கான வேலையை செய்துவிட்டு சென்று இருக்கிறார். பேயாக வரும் செல்வராகவன் சந்தானம் தமிழில் இணைந்து அட்ராசிட்டி செய்திருக்கிறார். இவர் சந்தானத்துக்கு கட்டைளை இடும் காட்சிகளில் அவருக்கான ட்ரேட் மார்க் நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
ஆஃப்ரோ இசையில் ஒரே ஒரு பாடல் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பின்னணி இசை இந்த படத்திற்கு எந்த அளவு தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறார். தீபக் குமார் பார்த்தி ஒளிப்பதிவில் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக படத்தின் கலை இயக்குநர் , எடிட்டர் மற்றும் இயக்குநர் ஆகிய மூவரும் சிறப்பான முறையில் இணைந்து எந்தெந்த காட்சிகளுக்கு எப்படியெல்லாம் காட்சி அமைப்புகள் தேவை என்பதை மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தி எந்த ஒரு இடத்தில் சற்றே மிஸ் ஆனாலும் அந்த இடம் அப்படியே சொதப்பிவிடும் என்ற இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பாக அனைத்து விஷயங்களையும் கையாண்டு ஒரு விறுவிறுப்பான வித்தியாசமான படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக திரைக்கதைக்கு ஏற்றார் போல் அமைத்த செட்டுகளும் அதற்கு ஏற்றார் போல் செய்த எடிட்டும் ஒன்றாக இணைந்து ஒரு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறது.
டெக்னிக்கலாக இந்த படம் மிகவும் ஸ்ட்ராங்கான படமாக அமைந்திருக்கிறது. அது திரைக்கதை வேகத்திற்கும் நன்றாக உதவி இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு டிரான்ஸிஷன் காட்சிகளுக்கும் இவர்கள் மெனக்கெட்டு இருப்பது சிறப்பாக அமைந்திருக்கிறது. அதற்கான உழைப்பு தெளிவாக தெரிகிறது. இயக்குநர், கலை இயக்குநர், படத்தொகுப்பாளர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். டிடி பட வரிசையில் நான்காவதாக வெளியாகி இருக்கும் இந்த டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் முந்தைய படங்களை காட்டிலும் காமெடியில் குறைவாக இருந்தாலும் ஒரு படமாக பார்க்கும் பட்சத்தில் ஒரு நல்ல பேய் த்ரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அதனை சீட்டு நுனியில் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு உருவாக்கியிருப்பது படத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ – நல்ல கிரியேட்டிவிட்டி!