இலங்கை
ரணிலின் தந்திரம் எம்மிடம் எடுபடாது; தேசிய மக்கள் சக்தி சவால்

ரணிலின் தந்திரம் எம்மிடம் எடுபடாது; தேசிய மக்கள் சக்தி சவால்
அரசாங்கத்துக்கு எதிராக, எதிரணிகளை ஓரணியில் திரட்டி ரணில் முன்னெடுக்கும் அரசியற் சூழ்ச்சி வெற்றியளிக்காது. ரணிலின் தந்திரங்கள் எம்மிடம் எடுபடாது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெறாத உள்ளுராட்சி சபைகளில், எதிரணிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றுமுன்தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே, சந்தன சூரியாராச்சி எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தேசிய மக்கள் சக்தி 267 சபைகளில் வெற்றிபெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியால் 15 வரையான சபைகளிலேயே வெற்றிபெற முடிந்துள்ளது. அந்த சபைகளிலும் தேசிய மக்கள் சக்திக்கு சமாந்தரமான ஆசனங்கள் உள்ளன.
எனவே, தேசிய மக்கள் சக்தி வென்றுள்ள சபைகளில் நாம் ஆட்சியமைப்போம். எதிரணிகளை மக்கள் தோற்கடித்துள்ளனர். எனவே, எதிரணிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க முற்படுவது மக்கள் விரோத செயலாகும். ஆதலால், மக்கள் ஆணையை நாம் நிச்சயம் பாதுகாப்போம். எதிரணிகள் இன்று வங்குரோத்தடைந்துள்ளன. ரணில் தலைமையில் எதிரணிகள் முன்னெடுக்கும் முயற்சி கைகூடாது. நாட்டுக்காக முன்னிலையாகும் சுயாதீன நபர்கள் எமக்கான ஆதரவை வெளிப்படுத்தலாம்’ -என்றார்.