
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 16/05/2025 | Edited on 16/05/2025

சூரி கதையின் நாயகனாக புதிதாக நடித்துள்ள ‘மாமன்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சூரி நடித்தது மட்டுமல்லாமல் கூடுதலாக கதையும் எழுதியுள்ளார். இப்படத்தை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கியிருக்க ‘கருடன்’ படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரித்துள்ளார். சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்திருக்க முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப் என்பவர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை சூரியின் ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளில் கண்டுகளித்தனர். மேலும் பேனர் வைத்து படம் வெற்றி பெற வாழ்த்தினர். அந்த வகையில் மதுரையில் சில ரசிகர்கள் படம் வெற்றி பெற வேண்டி மண் முருகன் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். இந்த செயல் பலரது கவனத்தை பெற்ற நிலையில் தற்போது சூரி அதனை கண்டித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அந்த தம்பிகள் செய்ததது முட்டாள்தனமானது. அவர்களை தம்பி என சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. படம் நன்றாக எடுத்தால் தானாக ஓடிவிடும். மண் சோறு சாப்பிட்டு படம் எப்படி எடுத்தாலும் ஓடு விடுமா. ரொம்ப வேதனையா இருக்கு. அவங்க மண் சோறு சாப்பிட்ட காசுல நாலு பேருக்கு தண்ணி வாங்கி கொடுத்து சாப்பாடு போட்டிருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன்.
இந்த மாதிரி செயலை செய்றவங்க, எனக்கு ரசிகர்களா இருக்கக்கூட தகுதியில்லாதவங்க. நான் உணவை ரொம்ப மதிக்கிறவன். சாப்பாட்டின் அருமை எனக்கு தெரியும். அது இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கேன். இப்படி இருக்கும் போது அந்த சாப்பாட்டுக்கு அந்த தம்பிங்க மரியாதையே கொடுக்கல. காலையில் இருந்து நல்ல விஷயங்கள் என் காதுக்கு வந்தது. ஆனால் இந்த செயல் என்னை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டது. தயவு செய்து இது போன்ற செயல்களை இனி யாரும் செய்யாதீங்க. சினிமா என்பது பொழுது போக்கு. அதை பார்த்து ரசியுங்க, கொண்டாடுங்க. அதோட நிறுத்துக்கோங்க. அதைத் தாண்டி மத்தவங்க முகம்சுளிக்கும் வகையில் எதையும் பண்ணாதீங்க. உங்களுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு, வாழ்க்கை இருக்கு அதை பாருங்க” என்றார்.