
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 17/05/2025 | Edited on 17/05/2025
நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு பிறகு அவரது மகன் அன்பு கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் தமிழ்சினிமாவில் உள்ள பல காமெடி நடிகர்கள் நடிப்பின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததா?
வறுமையின் காரணமாக திருடுவதை தொழிலாக செய்யும் இளைஞன். ஒரு கல்யாண மண்டபத்தில் புகுந்து திருடுகிறான். அதன் விளைவாக அங்கு நடக்கவிருந்த கமலி என்ற பென்ணின் திருமணம் நின்று போகிறது. உடனடியாக அந்த இளைஞன் இறந்துபோகிறான். எமலோகத்தில் அவனை சந்திக்கும் எமன், ‘நீ செய்த குற்றத்துக்கு பரிகாரமாக உன்னால் கல்யாணம் நின்றுபோன பெண்ணுக்கு ஏற்ற வரனை தேடி, 60 நாட்களுக்குள் கல்யாணம் செய்து வைக்க வேண்டும்’ என்று கட்டளையிட்டு, ‘அதை செய்யாவிட்டால் உன் தலை வெடித்துவிடும்’ என எச்சரித்து பூலோகத்துக்கு அனுப்பி வைக்கிறார்.
‘எமனை சந்தித்த விஷயத்தை நெருங்கிய நண்பனை தவிர வேறு யாரிடமும் சொல்லக்கூடாது’; ‘அந்த பெண்ணை தானே கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படக்கூடாது’, ‘அவளுக்கு பிடிக்காத மாப்பிள்ளையை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைக்கக்கூடாது’ என்றெல்லாம் எமன் விதித்த கட்டுப்பாடுகளை ஏற்றுகொண்டு பூலோகத்துக்கு வந்து கமலிக்கு மாப்பிள்ளை தேடுகிறான். அந்த தேடலில் அவன் சந்திக்கும் சிக்கல்கள், அடுத்தடுத்த காட்சிகளாக நகர்ந்து போக, 60 நாட்களுக்குள் கமலாவுக்கு கல்யாணம் நடந்ததா ? அவனின் தலை வெடித்ததா என்பது மீதி கதை.
குருவாக அன்பு மயில்சாமி. ஹீரோயினை காதலிப்பது, ஜாலியாக பொழுதைக் கழிப்பது என்றில்லாமல் அவளுக்கு மாப்பிள்ளை தேடுகிற வித்தியாசமான பொறுப்பு அவருக்கு. பார்க்கிற மாப்பிள்ளைகள் பெண்ணுக்கு பிடித்தாலும் ஏதோவொரு விதத்தில் திருமணம் தடைபட்டுவிட என்ன செய்வது என புரியாமல் தவித்துப் போவதை, கமலி தன்னை விரும்புவது தெரிந்தாலும் அதை ஏற்க முடியாத நிலைமையை அலட்டலில்லாத நடிப்பின் மூலம் மிகச்சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி கமலியாக லட்சணமான முகத்தோடும் குடும்பப் பாங்கான தோற்றத்தோடும் சந்திரிகா. குரு தனக்கு பார்க்கும் மாப்பிள்ளைகள் ஒத்துப்போகாமல் தள்ளிப்போக தள்ளிப்போக, யாருமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து குருவின் மனதில் இடம்பிடிக்க நினைப்பது, தன் விருப்பத்தை அவனிடம் உணர்த்த முயற்சிப்பது என தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து, பாடல் காட்சியில் மெல்லிய கவர்ச்சியும் காட்டியிருக்கிறார். எமனாக வருகிற நெல்லை சிவாவின் நடிப்பை காண முடிகிறது.
தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் முறைப்பெண் கமலாவை எப்படியாவது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றிச்சுற்றி வந்து பிரச்சனை செய்வதில் கணிசமான மிரட்டலை பிரதிபலித்திருக்கிறார் கராத்தே ராஜா.அர்ஜுனன் கதாநாயகனுக்கு நண்பனாக பங்கெடுத்து சிறப்பித்துள்ளார். கடமையை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார்.
நாயகிக்கு தந்தையாக டி பி கஜேந்திரன், உறவினராக ஆர்.சுந்தர்ராஜன்… அவர்களோடு சார்லி,ஷகிலா, சங்கிலி முருகன், டெல்லி கணேஷ், பாண்டு, நளினி, வையாபுரி, பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாப், கொட்டாச்சி என நிறையப் பேர் படத்தில் நடித்திருக்கிறார்கள்.என்.சசிகுமார் இசையில் ‘காசு காசு காசுடா’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. சண்டக்காரா’ பாடல் கேட்கத் தூண்டி மனதை சற்றே ஈர்க்கிறது. பக்திப் பரவசமூட்டும் ‘ஆதி பரமேஸ்வரி’ பாடல் கதையோட்டத்தின் வந்து நிற்கிறது.இன்றையசூழலில், விடுமுறையில் அனைவரும் போய் ரசிக்கும்படியாய் திரைக்கதை அமைத்து எஸ்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார்.
எமன் கட்டளை – நகைச்சுவை முயற்சி!