இலங்கை
இலங்கையில் தொடரும் விபத்துக்களால் பறிபோகும் உயிர்கள்

இலங்கையில் தொடரும் விபத்துக்களால் பறிபோகும் உயிர்கள்
இலங்கையில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் சிறுவன் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் நேற்று (17) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, ஹபரணை பொலிஸ் பிரிவின் குடரம்பாவெவ-கும்புக்வெவ வீதியில் குடரம்பாவெவ நெல் வயல்களுக்கு அருகில் நேற்று மாலை கெப் வண்டி ஒன்று வீதியில் நின்று கொண்டிருந்த சிறுவன் மீது மோதியது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன், ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஹபரணை, குடாரம்பாவெவ பகுதியைச் சேர்ந்த 8 வயதான சிறுவன் என தெரியவந்துள்ளது.
மேலும், நேற்று மாலை, வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாரியபொல-சிலாபம் வீதியில், வாரியபொல நகரில் குருநாகல் திசையிலிருந்து வாரியபொல பேருந்து நிலையம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, பாதசாரி கடவையைக் கடந்த பெண் ஒருவர் மீது மோதியது.
விபத்தில் பலத்த காயமடைந்த பெண், வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மஹாகெலிய வாரியபொல பகுதியைச் சேர்ந்த 66 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை இலங்கையில் கடந்த சில தினங்களில் விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.