விளையாட்டு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்திய அணி விலகல்: பி.சி.சி.ஐ. அதிரடி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்திய அணி விலகல்: பி.சி.சி.ஐ. அதிரடி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஐ.சி.சி. தொடர்களில் ஆசிய அணிகள் சிறப்பாக செயல்படும் பொருட்டு இந்த தொடர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆசிய கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.இந்நிலையில் கடந்த மாதம் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. தொடர்ந்து, இந்திய ராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. மே 7-ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. இருந்த போதிலும், பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த முடிவுகளில் இருந்து இந்தியா பின்வாங்காமலேயே இருக்கிறது. அதேவேளை, கடந்த 10ம் தேதி இருநாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: BCCI set to pull out from Asia Cupஇந்நிலையில், ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய ஆசிய கிரிக்கெட் சங்கத்தினுடைய தலைவராகப் பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இதன்காரணமாக, ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் அனைத்து தொடர்களிலிருந்து விலகுவதாக பிசிசிஐ முடிவு செய்து உள்ளது. அடுத்த மாதம் இலங்கையில் மகளிருக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ள நிலையில், அந்த தொடரில் இருந்தும் விலகுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து ஆசிய கிரிக்கெட் சங்கத்திற்கு மின்னசஞ்சல் மூலமாக தகவல் தெரிவித்துள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் பிசிசிஐ இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “பாகிஸ்தான் அமைச்சரை தலைவராக கொண்ட ஆசிய கிரிக்கெட் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் போட்டியில் இந்திய அணி விளையாட முடியாது. அதுதான் நாட்டின் உணர்வு. ஆசிய கோப்பையிலிருந்து நாங்கள் விலகுவதை ஏ.சி.சி-க்கு வாய்மொழியாகத் தெரிவித்துள்ளோம், மேலும், அவர்களின் எதிர்கால போட்டிகளில் பங்கேற்பதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்” என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.பி.சி.சி.ஐ-யின் இந்த நிலைப்பாடு செப்டம்பரில் இந்தியா நடத்தவிருந்த ஆண்கள் ஆசிய கோப்பைக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது.இந்தியாவின்றி ஆசிய கோப்பை சாத்தியமில்லை என்பதை பி.சி.சி.ஐ. அறிந்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் பெரும்பாலான ஸ்பான்சர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மேலும், அதிக வருவாய் ஈட்டித் தரும் இந்தியா-பாக்., போட்டி இல்லாமல் ஆசிய கோப்பை ஒளிபரப்பாளர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தாது.2024-ல், ஆசிய கோப்பை ஒளிபரப்பு உரிமையை சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) அடுத்த 8 ஆண்டுகளுக்கு 170 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கைப்பற்றியது. இந்தத் தொடர் நடைபெறாவிட்டால், ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.ஏ.சி.சி-யின் 5 முழு உறுப்பினர்களான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஒளிபரப்பு வருவாயில் இருந்து தலா 15% கிடைக்கும், மீதமுள்ள தொகை இணை மற்றும் துணை உறுப்பினர்களுக்கு தரப்படும். 2023-ல் நடைபெற்ற கடைசி ஆசிய கோப்பை தொடரும் இந்தியா-பாக்., சூழ்நிலையால் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் தொடரை நடத்தியதால், இந்தியா எல்லை தாண்டிச் செல்ல மறுத்தது. இந்தியா தனது போட்டிகளை இலங்கையில் விளையாடுவதை பி.சி.சி.ஐ. உறுதி செய்தது. பாக்., இறுதிப்போட்டிக்கு முன்னேற தவறியதாலும், கொழும்பில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை இந்தியா வென்றதாலும், பிசிபிக்கு தொடர் ஏமாற்றமாக அமைந்தது.2024-ல் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இதே நிலை மீண்டும் நிகழ்ந்தது. இந்தியா மீண்டும் துபாயில் தனது போட்டிகளை விளையாடியது. இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை வென்றதால், பாகிஸ்தானுக்கு இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பு பறிபோனது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உலகளாவிய அமைப்பாக இருந்தாலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி) 1983 துணைக்கண்டத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கும், உலக கிரிக்கெட்டில் ஒரு சக்திவாய்ந்த ஆசிய அணியை உருவாக்குவதற்கும் நிறுவப்பட்டது. முன்னதாக, ஜெய் ஷா கடந்த ஆண்டு ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு ஏசிசி தலைவராக இருந்தார்.