இந்தியா
ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை கருத்து: அசோகா பல்கலை. பேராசிரியர் அலி கான் கைது

ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை கருத்து: அசோகா பல்கலை. பேராசிரியர் அலி கான் கைது
ரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும், துறைத்தலைவருமான அலிகான் மஹ்முதாபாத், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டதாக டெல்லியில் கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு படையில் உள்ள பெண் அதிகாரிகளை அவமதிக்கும் வகையிலும், வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் கருத்து தெரிவித்ததாகக் கூறி ஹரியானா காவல்துறையினரால் அலிகான் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் உத்தரப்பிரதேசத்தின் மஹ்மூதாபாத் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் அரசியல் அறிவியலாளர் ஆவார்.அலிகானின் சக ஊழியர்கள் அவரை பன்மொழியில் புலமை பெற்ற அரசியல் அறிஞராக பார்க்கின்றனர். “காலனித்துவ இந்திய பிற்பகுதியில் முஸ்லீம் அரசியல் சிந்தனை குறித்து நிபுணத்துவம் பெற்றவர். அதைப்பற்றி ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். இந்தி, உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்த பன்மொழி அறிஞர். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் மற்றும் சிரியாவில் டமாஸ்கஸ் ஆகிய 2 இடங்களிலும் அலி கான் பயின்றுள்ளார். இது அவருக்கு பல கலாச்சார புரிதலை வழங்குகிறது” என்று அசோகா பல்கலை.யில் மூத்த அரசியல் விஞ்ஞானி ஒருவர் கூறினார்.அலி கான் மஹ்மூதாபாத் 1982 டிச.2-ம் தேதி பிறந்தார். லக்னோவில் உள்ள லா மார்டினியர் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர் 1996 வரை இங்கிலாந்தில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் பயின்றார். 2001-ல் வின்செஸ்டர் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அலிகான் 2018-ல் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்த பிறகு, 2019 முதல் 2022 வரை கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தார். அவர் கட்சியில் தீவிரமாக இருந்த வரை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் நெருங்கிய நபர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். 2022 முதல், அலிகான் கட்சியின் எந்த அதிகாரப்பூர்வ பதவியிலும் இல்லை, அரசியலிலும் செயலற்ற நிலையில் உள்ளார்.அலிகான் பிரபலமாக ராஜா சாஹிப் மஹ்மூதாபாத் என்று அறியப்பட்ட முகமது அமீர் முகமது கான் “சுலைமான்” அவர்களின் மகன் ஆவார். சுலைமான் தனது மூதாதையர் சொத்துக்களை அரசு எதிரி சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ததை மீட்டெடுக்க சுமார் 40 ஆண்டுகள் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டார். சுலைமானும் 1965-ல் கேம்பிரிட்ஜ் சென்று கணிதம் பயின்றார். சுலைமானுக்கு அரசியல் வாழ்க்கையும் இருந்தது. அவர் மஹ்மூதாபாத்திலிருந்து 2 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகவும், உத்தரபிரதேசத்தின் அவாத் பிராந்தியத்தில் பிரபலமான அரசியல்வாதியாகவும் இருந்தார்.அவருடைய சொத்து லக்னோ நகரின் மைய பகுதியில் உள்ள பல நிலங்களை உள்ளடக்கியவையாகும். இதில் புகழ்பெற்ற பட்லர் அரண்மனை, ஹஜ்ரத்கஞ்ச் சந்தையின் பெரிய பகுதி, ஹல்வாசியா சந்தை மற்றும் மஹ்மூதாபாத் கிலா ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் சேர்ந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையவையாக உள்ளன. மஹ்மூதாபாத் குடும்பத்தின் சொத்துகள் லக்னோ, சீதாப்பூர் மற்றும் உத்தரகண்டின் நைனிதால் ஆகிய இடங்களில் பரந்து பரவியுள்ளன.சுலைமான் நீண்டகால நோய்க்குப் பிறகு அக்.2023-ல் காலமானார். அவர் மஹ்மூதாபாத்தின் கடைசி ஆளும் ராஜாவான முகமது அமீர் அகமது கானின் ஒரே மகன் ஆவார். முகமது அமீர் அகமது கான், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் மிகவும் செல்வந்த நில உரிமையாளர்களான ஜமீன்தார்களுள் ஒருவர். இந்தியப் பிரிவினைக்கு முந்தைய ஆண்டுகளில் முகமது அமீர் அகமது கான் முஸ்லீம் லீக்கின் நீண்டகால பொருளாளராகவும், முக்கிய நிதியுதவியாளராகவும் இருந்தார்.பிப்.2020-ல், அலி கான் மஹ்மூதாபாத் “Poetry of Belonging” என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது 1850-1950 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவின் முஸ்லீம் கற்பனைகளை வரைபடமாக்க முயற்சிக்கிறது. அவர் அவாத் சூஃபிக்கள், லக்னோ, ஷியாக்கள் மற்றும் இந்தியாவின் முஸ்லீம் கற்பனைகள் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். கர்னல் குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங்கின் செய்தியாளர் சந்திப்பு வெறும் ஆப்டிக் என அலி கான் கூறியிருந்தார். களத்தில் அவை எதிரொலிக்காத வரை வெறும் பாசாங்குத்தனம் மட்டுமே என எக்ஸ்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பாதுகாப்புப் படையிலுள்ள பெண்களை இழிவுபடுத்தும் நோக்கிலும் அவர்களின் பங்கைக் குறைத்து மதிப்பிடும் நோக்கிலும் அலிகான் கருத்துகள் இருப்பதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. ஹரியானா மாநில பெண்கள் ஆணையம் மே 12 அன்று அனுப்பிய நோட்டீஸைத் தொடர்ந்து அலிகான் கைது செய்யப்பட்டார். இந்த சமூக ஊடக கருத்துக்கள் “தேசிய இராணுவ நடவடிக்கைகளை இழிவுபடுத்தும் முயற்சி” என்று ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.