பொழுதுபோக்கு
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்.. ரேஸின்போது கார் டயர் வெடித்தது!

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்.. ரேஸின்போது கார் டயர் வெடித்தது!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியான “குட் பேட் அக்லி” படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகராக இருக்கும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. இந்தாண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. மேலும், இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.அதனை தொடர்ந்து, ஐரோப்பாவில் ஜிடி-4 கார் பந்தயம் நடைபெற்று வரும் நிலையில் அதில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மொத்தம் 43 கார்கள், சுழற்சி முறையில் 83 ஓட்டுநர்கள் கார் பந்தயத்தில் கலந்து கொண்டனர். நடிகர் அஜித்குமார் கார் இயக்கிக் கொண்டிருந்த பொழுது, போட்டி ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே காரின் வலது புறம் முன்பக்க டயர் வெடித்தது. நடிகர் அஜித்குமார் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். ஏற்கனவே இதுபோன்ற கார் பந்தயங்களில் ஏற்பட்ட விபத்துகளில் அவர் தப்பி இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து அஜித்குமாரின் பந்தய கார் டிராக்கில் இருந்து கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.ரேஸில் அஜித் ஓட்டிய காரின் டயர் திடீரென வெடித்து புகை வந்தது. உடனே காரை நிறுத்தியதால் காயமின்றி தப்பியுள்ளார் அஜித். அஜித் ஓட்டிய கார் டயர் வெடித்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நவம்பர் மாதத்தில் தான் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால், தற்போது அஜித் தனது முழு கவனத்தையும் மோட்டார் ஸ்போர்ட்ஸில் செலுத்தி வருகிறார். தினமும் கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மற்றும் குறைந்தது 5 – 6 மணி நேரம் பந்தய பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் எனக் கூறப்படுகிறது.