விளையாட்டு
உங்க சீசன் முடிஞ்சு போச்சு… ரிஷப் பண்ட்டுக்கு ரெஸ்ட் குடுங்க: லக்னோ அணிக்கு கிரிஸ் ஸ்ரீகாந்த் அட்வைஸ்

உங்க சீசன் முடிஞ்சு போச்சு… ரிஷப் பண்ட்டுக்கு ரெஸ்ட் குடுங்க: லக்னோ அணிக்கு கிரிஸ் ஸ்ரீகாந்த் அட்வைஸ்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய ஐதரபாத் 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. இதன் மூலம் லக்னோவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது. படுதோல்வியைச் சந்தித்த லக்னோ பிளே-ஆஃப் தகுதி பெறுவதில் இருந்து பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிறிஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்த சீசனுக்கு முன்னதாக நடந்த மெகா ஏலத்தில் லக்னோ அணி ரிஷப் பண்ட்டை ரூ.27 கோடிக்கு வாங்கியது. ஆனால், இந்த சீசனில் பெரிதும் சோபிக்கவில்லை. நடப்பு தொடரில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிராக ஆட்டத்தில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். நடப்பு தொடரில் இதுவரை அவர் 11 இன்னிங்ஸ்களில் மூன்று முறை மட்டுமே இரண்டு இலக்க ஸ்கோரை எட்டியுள்ளார். இந்த சீசனில் அவரது ஸ்கோர்கள்: 0, 15, 2, 2, 21, 63, 3, 0, 4, 18 மற்றும் 7 ரன்கள் என உள்ளது. ஆரம்பத்தில் அவர் ஃபார்முக்காக போராடுவதற்கான எந்த அறிகுறிகளைக் காட்டவில்லை. மேலும் தொடரின் நடுவில் அவரது பேட்டிங்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது அவர் மீதான அழுத்தத்தை அதிகரிக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் முக்கியமான இங்கிலாந்து சுற்றுப்பயணம் வரவிருக்கும் நிலையில், அவரின் ஃபார்ம் இந்தியாவிற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து தனது யூடியூப் சேனலான சீக்கி சீகாவில் பேசிய ஸ்ரீகாந்த், “ரிஷப் பண்ட் விளையாட்டிலிருந்து சிறிது நேரம் விலகி இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாக விஷயங்கள் அவரின் வழியில் நடக்கவில்லை. கேப்டனாக இருக்கும்போது, பந்துவீச்சு மாற்றங்களாக இருந்தாலும் சரி, பீல்டிங் செட்-அப்களாக இருந்தாலும் சரி, அவர் ஏதோ ஒரு வடிவத்தில் குழப்பமடைவது போல் தெரிகிறது. விஷயங்கள் அவரது வழியில் நடக்கவில்லை. பேட்டிங்கில் கூட, அவரால் சுதந்திரமாக விளையாட முடியும், தைரியமாக இருக்க முடியும், ஆனால் அவர் தெளிவின்றி அரை மனதுடன் ஷாட்களை விளையாடுவது போல் தெரிகிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் ஆட்டமிழப்பதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகிறார். நான் விளையாடும் நாட்களில் நான் ஆட்டமிழப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பேன், பண்ட் என்னை விட மோசமாக செயல்படுகிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அப்படித்தான் இருந்தேன், இன்று அவர் அவுட் ஆகி வெளியேற புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகிறார். ரிவர்ஸ்-ஸ்வீப், ரிவர்ஸ்-பேடில், முரட்டுத்தனமாக ஸ்விங் என இவை அனைத்தும் நடக்கிறது. அவரை தனியாக விட்டுவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் போதுமான அளவு அவரிடம் சொல்ல வேண்டும். சீசன் முடிந்துவிட்டது போய் சிறிது நேரம் ஓய்வு எடுங்கள் என்று கூற வேண்டும். அடுத்த சீசனுக்கு அவர்கள் என்ன திட்டமிட்டிருந்தாலும் – அவர்கள் மையத்தை மாற்றி பந்து வீச்சாளர்களைக் கொண்டு வந்துள்ளனர் – இந்த அணியில் அவர்களுக்கு எந்த பந்து வீச்சாளர்களும் இல்லை,” என்று ஸ்ரீகாந்த் கூறினார்.